தமிழ்நாடு

கரோனா முன் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற பெற்றோர்கள் கோரிக்கை

13th Apr 2021 02:24 PM

ADVERTISEMENT

 

பிளஸ் 2 தேர்வு நடைபெறும் மையங்களில், கரோனா தொற்று முன் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமெனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது சம்பந்தமாக திருவாரூர் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் சா.த. அண்ணாத்துரை,

தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கல்வித்துறைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோருக்குத் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள  கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,

ADVERTISEMENT

தமிழக அரசின் கல்வித்துறை சார்பாக பிளஸ்-2 செய்முறைத் தேர்வுகள் வெள்ளிக்கிழமையிலிருந்தும், எழுத்துத் தேர்வுகள் மே மாதம் மூன்றாம் தேதியிலிருந்தும் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி இறுதித் தேர்வாக இருப்பதன் காரணமாக, பெற்றோர்கள் சார்பாக  இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுப்பது சரியாக இருக்காது என்பதை உணர்கிறோம். 

மேலும் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டால், நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் மேல்நிலைக் கல்விக்காக கல்லூரி செல்ல உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படித் தேர்வு நடைபெறுவதில் எவ்வித ஆட்சேபனையும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் கிடையாது. ஆனால் தற்போது கரோனாத் தொற்று தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. 

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே  கரோனாத் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளது. மாணவர்களும், பெற்றோர்களும் தங்களுக்கும் கரோனாத் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே அரசு அறிவித்த கால அட்டவணையின் படி நடைபெற உள்ள பிளஸ் டூ தேர்வுகளின் போது, கரோனா முன் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகவும், ஒழுங்காகவும், எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் கண்டிப்புடன் பின்பற்றுவதற்குத் தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 

மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் கரோன முன் தடுப்பு நடவடிக்கைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்திட, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறை அலுவலர்களை நியமித்து,  தடுப்பு நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படாத மையங்கள் சார்பான குறைபாடுகளுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டுமென அவருக்கு அறிவுரை வழங்கிட வேண்டும். கரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில், மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வு நடைபெறுவதை எதிர்க்கவில்லை. 

ஆனால், கரோனாத் தொற்று முன் தடுப்பு நடவடிக்கைகள்  முறையாகப் பின்பற்றப்படாத காரணத்தினால், தேர்வு எழுதும் மாணவர்களுக்குக் கரோனாத் தொற்று ஏற்பட்டு அதன் மூலம் பெற்றோர்கள், அவர்களது உறவினர்களுக்குப் பரவி, தொற்று சமுதாயப் பரவல் ஆகிடாத வகையில், அரசு முழுமூச்சுடன் தீவிரமாகச் செயல்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.


 

Tags : பிளஸ் 2 கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT