தமிழ்நாடு

பொதுமக்களின் கூட்டுமுயற்சியால் மட்டுமே கரோனா தொற்று பரவலைத் தடுக்கலாம்: சி.முனியநாதன்

13th Apr 2021 02:45 PM

ADVERTISEMENT

 

பொதுமக்கள் கூட்டுமுயற்சியுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே கரோனா தொற்று பரவலைத் தடுக்க முடியும் என்று மயிலாடுதுறையில் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரும், மாவட்ட கரோனா தடுப்புக் கண்காணிப்பு அலுவலருமான சி.முனியநாதன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா சிறப்புத் தடுப்பூசி முகாமை ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரும், மாவட்ட கரோனா தடுப்புக் கண்காணிப்பு அலுவலருமான சி.முனியநாதன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 

ADVERTISEMENT

பொதுமக்களிடம் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால், அதிகம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பின் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்து, ரேஷன் கடை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரண்டாவது அலை வைரஸ் தொற்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு சார்பில் வெளியிடப்படும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். பொதுமக்கள் கூட்டு முயற்சியுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை; கடைப்பிடித்தால் மட்டுமே கரோனா தொற்று பரவலைத் தடுக்க முடியும் என்றார்.

அவருடன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 
முன்னதாக, மயிலாடுதுறை காவேரிநகர் டான்ஸி சாலையில் உள்ள மாயூரநாதர் மஹாலில் திறக்கப்பட உள்ள கூடுதல் கரோனா சிகிச்சை மையத்தை அவர் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.முருகதாஸ், வருவாய்க் கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஆர்.மகேந்திரன், மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலர் ஆர்.ராஜசேகர், வட்டாரப் போக்குவரத்துக் கழக மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை-1) ராம்குமார், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Corona infection கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT