சிதம்பரம்: கரோனா தொற்று இரண்டாவது அலை தொடங்கியுள்ளதால், தமிழகஅரசு அனைத்து பகுதிகளிலும் கபசுரகுடிநீர் முகாம்கள் அமைத்து மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடித விபரம்: தற்போது கரோனா தொற்று இரண்டாவது அலையாக தமிழகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் அதிகமாக கரோனா தொற்று பரவி வருகிறது. தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருப்பினும் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. கரோனா தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. பல்வேறு சந்தேகங்களினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சிக்கன்குனியா விஷ சுரம் பரவிய போது தமிழகம் முழுவதும் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் அமைத்து மக்களுக்கு வழங்கி அந்த நோயை கட்டுப்படுத்தினார். அதே போல் தற்போது கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் கபசுர குடிநீர் வழங்கும் முகாம்களை தமிழகம் முழுவதும் அமைத்து மக்களுக்கு வழங்க வேண்டும் என தில்லை ஆர்.மக்கீன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.