எடப்பாடி: எடப்பாடி அருகே காதல் தகராறில், காதலனின் தந்தை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட புதுப்பாளைம் கிராமம், செங்கான்வளவு பகுதியை சோந்தவர் தங்கவேல்-55 இவரது மகன், பிரகாஷ்-25, ஓட்டுநரான இவர், புதுப்பாளைம், காச்சகாரன் வளவுப் பகுதியை சேர்நத கல்லூரி மாணவியான செல்வம் மகள் சத்தியா-21 என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சத்தியா செவிலியர் பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு பயின்று வந்த நிலையில், கடந்த மார்ச் 15 ஆம் தேதி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போன நிலையில், சத்தியாவின் தந்தை கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.
போலீஸாரின் விசாரணையில், ஓட்டுனர் பிரகாஷ், சத்தியாவை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அழைத்து சென்றதாக தெரியவரவே, அவர்களை கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சத்தியா தனது தந்தை செல்வதுடன் செல்வதாக கூறியதை அடுத்து, அவர் தந்தையுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சத்தியா கடந்த மாதம் 29 ஆம் தேதி மீண்டும் வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில், மீண்டும் பிரகாஷ்தான் தனது மகளை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றிருப்பார் என சந்தேகம்மடைந்த செல்வம், செவ்வாய் அன்று மாலை பிரகாஷின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த பிரகாஷின் தந்தை தங்கவேலுவிடம், தனது மகளை என்னோடு அனுப்பிவையுங்கள் என கூறி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கிருந்த கத்தியால், செல்வம், தங்கவேலுவின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதியில் பலமாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த தங்கவேலுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தங்கவேலுவை
பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்த செல்வத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.