தமிழ்நாடு

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை பிரதமர் அமல்படுத்துவாரா?

1st Apr 2021 04:32 AM

ADVERTISEMENT

 

திருப்பூர்: பெண்கள் மீது அக்கறை இருப்பதுபோல பாசாங்கு செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவாரா என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பினார்.
திருப்பூர் வடக்குத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எம்.ரவியை ஆதரித்து, பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த டி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுயசார்பு இந்தியா என்று பேசும் பிரதமர் மோடி,  மக்கள் நலனைப் புறக்கணித்து பெரு முதலாளிகளையும், அன்னிய முதலீட்டாளர்களையும் சார்ந்திருக்கின்ற நாட்டை உருவாக்கி வருகிறார். 
மாநில உரிமை, மக்கள் நலனைக் காப்பாற்ற முடியாத கட்சியாக அதிமுக, பாஜகவின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து உள்ளது. இதன் காரணமாக தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியைத் தோற்கடித்து திமுக கூட்டணியை மக்கள் அமோக வெற்றியடையச் செய்வார்கள். 
தமிழகம் வந்த மோடி பெண்கள் மீது அக்கறை இருப்பதுபோல பாசாங்கு செய்து உள்ளார். மக்களவையில் தனக்குள்ள பெரும்பான்மை பலத்தால் விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதா, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியதுபோல, நீண்ட நெடும் காலமாக இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவாரா என்றார்.  பேட்டியின்போது, திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன், மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT