தமிழ்நாடு

சம்பிரதாய மரபுகளை மீறிய பிரதமர் மோடி: கே.எஸ். அழகிரி

1st Apr 2021 01:10 PM

ADVERTISEMENT

 

தமிழக பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர்  நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரத்தின்போது, ஒரு பிரதமரின் சம்பிரதாய மரபுகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தமிழக வளர்ச்சிக்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் தமது தகுதிக்கு குறைவான பல்வேறு கருத்துக்களை கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக, மக்களவை தி.மு.க. உறுப்பினர் ஆ. ராசா கூறிய கருத்துக்கு கண்டனத்தை தெரிவிக்கிற வகையில் பிரதமர் பேசியது அவரது பதவிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.

ஏற்கனவே, ஆ. ராசா, தான் கூறிய கருத்துக்கு மனப்பூர்வமான மன்னிப்பை வெளிப்படுத்திருக்கிறார். அதேபோல, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அந்த கருத்துக்கு கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் பிரதமர் மோடி, ஆ. ராசா பற்றி குறிப்பிட்;டு பேசியதோடு நில்லாமல், தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி குறித்தும் பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தியாவின் பிரதமராக இருப்பவருக்கு சில சம்பிரதாய மரபுகள் உள்ளன. அதனை முற்றிலும் புறக்கணிக்கிற வகையில் அவரது தமிழக தேர்தல் சுற்றுப் பயண பேச்சு அமைந்தது பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டதையே உறுதி செய்கிறது.

தி.மு.க., காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான இயக்கம் என்று பிரதமர் மோடியும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் 33 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டுமென்ற மசோதாவை நிறைவேற்றுகிற வகையில், 108-வது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை 2010 மார்ச் 9 ஆம் தேதி அன்னை சோனியா காந்தியின் தீவிர முயற்சியால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் மக்களவையில் நிறைவேற்றப்படாமல் கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டிருந்தால் பெண்களுக்கான மேம்பாடு உயர்ந்து சமஉரிமை, சமவாய்ப்பு பெற்றிருப்பார்கள். ஆனால், அந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற பா.ஜ.க. முயற்சி செய்யவில்லை.

2014 மக்களவை தேர்தலில் 62 பெண்களும், 2019 மக்களவை தேர்தலில் 78 பெண்களும், அதாவது, 14.31 சதவிகிதம் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய குறைவான பிரதிநிதித்துவம் மேலும் உயர்ந்து 33 சதவிகிதமாக அன்னை சோனியா காந்தியின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பை பா.ஜ.க. முடக்கியது என்பதை குற்றச்சாட்டாக கூற விரும்புகிறேன்.

விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து மகாத்மா காந்தி தலைமையில், பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கிய பெருமை இந்திய தேசிய காங்கிரசிற்கு உண்டு. ஆனால், இன்றைய பா.ஜ.க.வின் தாய் ஸ்தாபனமாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இதுவரை ஒரு பெண் உறுப்பினராகவோ, தலைமைப் பொறுப்பிற்கோ வந்ததில்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் கோல்வால்க்கர் சித்தாந்தமே பெண்களுக்கு எதிரானது. இந்த இயக்கம் எப்பொழுதுமே பெண்கள் உரிமையை ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால், காங்கிரஸ் இயக்கத்தில் இன்றைக்கும் பல பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் வருவதை பார்க்க முடிகிறது.

எனவே, ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை கூறி, தி.மு.க., காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான இயக்கம் என்று உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில், பிரதமர் மோடி உள்ளிட்ட எவர் கூறினாலும், அதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க தயாராக இல்லாத நிலையில், தேர்தல் பிரசாரத்தை திசை திருப்பி அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற கனவு நிச்சயம் நிறைவேறாது. தமிழக வாக்காளர்கள் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை தோற்கடித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அமோக வெற்றி வழங்குவது உறுதியாகி விட்டது என்று தெரிவித்துள்ளார்.
 

Tags : congress pm modi ks azhagiri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT