தமிழ்நாடு

பெண் கல்வி இலவசமாக வேண்டும்!

1st Apr 2021 04:55 AM | என்.தமிழ்ச்செல்வன்

ADVERTISEMENT

 

குடியாத்தம் அருகேயுள்ள கொத்தக்குப்பம் கிராமத்தில் பிறந்தவர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன்.  பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே அரசியலில் தீவிர ஈடுபாடு.  1967, 1971-இல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை திமுக நிறுவனர் அண்ணா வழங்கினார். இரண்டு முறையும் வெற்றி.  பின்னர், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 1980-இல் அணைக்கட்டு தொகுதியிலும், 1991-இல் ஆற்காடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 ஜெயலலிதா அமைச்சரவையில் தமிழக உணவு, பொது விநியோகத் துறை அமைச்சராக இருந்தவர்.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாத தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்?

மக்களாட்சியில் கட்சிகளையும்,  கொள்கைகளையும் வைத்தே மக்கள் வாக்களிக்க வேண்டும்.   இந்தியாவில் தலைவர்களை முன்மாதிரியாக வைத்தே வாக்களிக்கப்படுகிறது.  கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாத தேர்தல்தான் என்றாலும் வேட்பாளர் தேர்வு, பிரசாரம்,  வாக்குறுதிகள் என அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே சரியான பாதையில் செல்வதை உணர முடிகிறது. இந்தத் தேர்தலில் வேட்பாளர்களையும், உத்தரவாதங்களையும் மக்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளது நல்ல மாற்றம்தான். 

ADVERTISEMENT

வாரிசு அரசியல் குறித்து உங்கள் கருத்து என்ன?

வாரிசு அரசியல் என்பது உலகம் முழுவதுமே இருந்து வருவதுதான். திடீரென யாரும் கட்சித் தலைவராகிவிட முடியாது. அந்தந்த கட்சியின் கோட்பாடுகளுக்கு உள்பட்டே வர முடியும். தகுதிகள் இருந்து சமூகப் பணிகளில் சிறப்பாகச் செயலாற்றுவோர் வாரிசாக இருந்தாலும் தவறில்லை. வாரிசுகளை ஏற்பதும் நிராகரிப்பதும் மக்களிடம்தான் உள்ளது.  

தமிழகத்தில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவின் நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழகத்தில் ஒருகாலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் , பின்னர் எதிர்க்கட்சியாகி தற்போது 25 தொகுதிகளில் போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளது.  தற்போது 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ அதைப் பொருத்தே அந்தக் கட்சியின் வளர்ச்சியும் அமையும்.  தமிழகத்தில் தமிழ் மொழிக்கும், மாநில சுயாட்சிக்கும்தான் முக்கியத்துவம் இருக்கும். இந்த உணர்வுகளை அந்தக் கட்சிகளும் வெளிப்படுத்தும் பட்சத்தில் தமிழகத்திலும் தேசிய கட்சிகள் வளர வாய்ப்பு ஏற்படும். 

மதம் சார்ந்த பிரசாரம் தமிழகத்தில் ஏற்கப்படுமா?

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையால்  மதவாதப் பிரச்னை ஏற்பட்டது வடமாநிலங்களில்தான். ஆகவே, அங்கு மதவாத பிரச்னைகள் உள்ளன. அங்குள்ள அரசியலிலும் மதவாத பிரசாரங்கள் எடுபடுகின்றன. ஆனால், தென்மாநிலங்களில் மதம் சார்ந்த பிரச்னைகள் அதிகமில்லை. எனினும், ஜாதி பிரிவினைகளும், பிரச்னைகளும் அதிகம் உள்ளன. அதனால் அரசியல் கட்சிகள் வளர்வதற்கு ஜாதிகளை பயன்படுத்தும் நிலை உள்ளது.

ஜாதி அரசியலில் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை நீங்கள் உணர்கிறீர்களா?

1967-இல் முதன்முதலாக நான் தேர்தலில் போட்டியிட்டபோது ஜாதி,  பண பலங்களை வைத்து வேட்பாளராக வாய்ப்பளிக்கப்படவில்லை.  கடந்த 30 ஆண்டுகளில் இந்த நிலை முற்றிலும் மாறியுள்ளதால்,  ஜாதி ஆதிக்கம் அதிகரிக்கவும், ஜாதிக் கட்சிகள் வளரவும் அடிப்படையாக அமைகின்றன. இது மக்களாட்சி தத்துவத்துக்கு நல்லதல்ல. இந்தப் போக்கை தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும், மக்களும் இணைந்தால் படிப்படியாக மாற்ற முடியும்.

தேர்தல் வாக்குறுதிகளாக இலவசத் திட்டங்கள் அறிவிப்பது அவசியமா?

பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை இலவசங்களாக அளிக்க வேண்டியது அவசியம்தான். அப்போதுதான் இலவசங்களே தேவையற்ற நிலைக்கு மக்களும் வளர முடியும். அதற்கு தனிமனித வருவாயை உயர்த்தக் கூடிய திட்டங்கள்தான் அவசியம். அதுதான் உண்மையான வளர்ச்சியாகவும் இருக்கும். 

இலவசங்கள் இல்லாத தேர்தல் சாத்தியமா?

சீன அரசு யாருக்கும், எதையும் இலவசமாக தருவதில்லை என்றாலும், அங்கு தனிமனித வருவாய் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. அதனால், மக்களின் வாழ்க்கைத்தரத்தை நிரந்தரமாக உயர்த்தக் கூடிய திட்டங்களை இலவசமாகத் தரலாம். குறிப்பாக, கல்வியை இலவசமாக அளிக்க வேண்டும். உலகில் 30 நாடுகளில் உயர்கல்வி வரை  எல்லோருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்படு கிறது. ஆனால், இந்தியாவில் பள்ளிக்கல்வியில்கூட வேறுபாடுகள் உள்ளன. முதல்கட்டமாக பெண் கல்வியை இலவசமாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட புதிய கட்சிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

கடந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 330 கட்சிகள் போட்டியிட்டதில் இறுதியாக 30 கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்றன. அதேபோல், தமிழகத்தில் புதிய கட்சிகளின் நிலைகள் அவை தேர்தலில் பெறும் வாக்குகளைப் பொருத்தே அமையும். மக்கள் ஆதரவு உள்ள கட்சிகள்தான் வளர்ச்சி பெற 
முடியும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT