தமிழ்நாடு

தேர்தல் வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

1st Apr 2021 02:40 PM

ADVERTISEMENT

 

அதிமுக அரசு அமைந்ததும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மதுரை கிழக்குத்தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து ஐயர் பங்களா பகுதியில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியது: 

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குப் பாடுபட்டனர். அவர்களது வழியில் செயல்பட்டுவரும் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது .

ADVERTISEMENT

சட்டப்பேரவை தேர்தலையொட்டி எல்லாக் கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. அதில் பல வாக்குறுதிகளை அளித்து இருக்கிறார்கள் அதிமுக தனது சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மூன்றாவது முறையாக அதிமுக அரசு அமைந்ததும் இந்த தேர்தல் வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் கட்டாயம் நிறைவேற்றப்படும்.

கடந்த 2006 தேர்தலின்போது திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை திமுக அரசு நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டது. ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியது குடும்பப் பெண்களின் கஷ்டத்தைப் போக்கும் வகையில் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி போன்றவை வழங்கப்பட்டன வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் காரணமாக கல்வி பெறுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக உயர் கல்விக்கு வருவோரின் தேசிய சராசரி 24 சதவீதம் தான். 

ஆனால் தமிழகத்தில் உயர்கல்விக்கு வருவோரின் எண்ணிக்கை 44 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் தான் இதற்கு காரணம் அதேபோல முந்தைய திமுக ஆட்சியின்போது ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.40,000 கோடிக்கு தொழில் முதலீடு பெறப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் 6.87 லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளன.

ஆகவே இத்தகைய வளர்ச்சி தொடர அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் அதிமுக அரசு அமைந்ததும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு போன்றது அது செல்லாததாகிவிடும் ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு அதற்குத்தான் மதிப்பு உண்டு ஆகவே திமுகவின் ஏமாற்று வேலையை மக்கள் நம்பிவிட வேண்டாம் என்றார். 
 

Tags : அதிமுக தேர்தல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT