தமிழ்நாடு

தமிழக மக்கள் குறித்து கவலைப்பட மோடியைத் தவிர வேறு யாருமில்லை: அமித் ஷா 

1st Apr 2021 03:24 PM

ADVERTISEMENT


விழுப்புரம்: தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டு கவலைப்படுவதில் மோடியைத் தவிர வேறு எந்த தலைவரும் கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதி பாஜக வேட்பாளர் வி.ஏ.டி.கலிவரதனை ஆதரித்து வெள்ளிக்கிழமை நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

திருக்கோவிலூரானது விஷ்ணுவின் அவதாரமான கோயிலும், சிவன் கோயிலும் ஒருசேர அமைந்துள்ள சிறப்புவாய்ந்த இடம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான இந்த திருக்கோவிலூர் மண்ணை கையெடுத்து கும்பிட்டுக் கொள்கிறேன். வரும் நாள்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க., இந்த தேர்தலை நடத்தப் போவதில்லை, தேர்தல் ஆணையம்தான் நடத்தப் போகிறது. ஏப். 6-ந் தேதி பா.ஜ.க.வின் ஸ்தாபன தினம். இந்த தினத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களான அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைப்பார்கள்.

இந்த தேர்தலானது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிரிலுள்ள ஊழல் கூட்டணியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே போட்டி நடந்து கொண்டிருக்கிறது. நான் இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரை பற்றி சொல்லியாக வேண்டும். அவர் மக்களின் உண்மையான தலைவராக விளங்கியவர். ஏழை மக்களுக்காக பணியாற்றியவர்கள் என நாடு முழுவதும் ஒருவருக்கு பெருமையை கொடுக்க வேண்டும் என்றால் அது எம்.ஜி.ஆரையே சாரும். அதன்பிறகு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். வழியில் பின்தொடர்ந்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்துச் சென்றுள்ளார். ஜெயலலிதா, ஒரு பெண்மணியாக எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர். தற்போது பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்பேரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் சிறப்பாக எடுத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

நமக்கெல்லாம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை பற்றி தெரியும். லஞ்சம், லாவண்யம், ரௌடியிசம், நில அபகரிப்பு, குடும்பத்தின் வளர்ச்சி இவற்றை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் எம்.ஜி.ஆர். வழியில் மோடியின் வழிகாட்டுதலின்பேரில் நல்ல பாதையில் தமிழகத்தை கொண்டு செல்லும். எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டினார்.

சமீபத்தில்கூட தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா, காலம் சென்ற எடப்பாடி பழனிசாமியின் தாயாரை பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார். தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்று தரக்குறைவான வார்த்தைகளை தி.மு.க.வினர் பேசி வருகிறார்கள். ஏற்கனவே முந்தைய காலங்களில் கூட ஜெயலலிதாவை பற்றி இது போன்ற பல அவதூறு கருத்துகளைச் சொல்லியுள்ளனர்.

நான் தமிழக மக்களிடம் கேட்க விரும்புவது என்னவெனில், மகளிர்கள், தாய்மார்களை பற்றி அவதூறு பரப்பி வரும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். தமிழகத்தில் ஸ்டாலின் ஊழலை பற்றி பேசுகிறார், அதற்கு முன்பு உங்களை அப்படியே திரும்பி பாருங்கள். 2ஜி  அலைக்கற்றை மூலமும், சன் டி.வி.யின் மூலமும் என்னென்ன ஊழல் செய்தீர்கள் என்று திரும்பிப்பாருங்கள். தி.மு.க. என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு வியாபார நிறுவனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

நான் இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா காலத்தில் தமிழக மக்களை காப்பாற்றியதில் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன். அதே நேரத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு தமிழக மக்களை பற்றி கவலையில்லை. சோனியா காந்திக்கு ராகுலை பற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியை பற்றியும் மட்டுமே கவலை. இவர்கள் தங்களது பிள்ளைகளை பற்றித்தான் கவலைப்பட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால் மோடிக்கு தமிழ் மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பும், பாசமும் இருக்கிறது. உலகமெங்கும் செல்லும் இடமெல்லாம் தமிழில் உள்ள குறளை மேற்கோள் காட்டியே அவர் பேசி வருகிறார். தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டு கவலைப்படுவதில் மோடியை தவிர வேறு எந்த தலைவரும் கிடையாது.

இலங்கையில் வாழும் தமிழக மக்களுக்காக வீடு கட்டிக் கொடுத்தது மட்டுமல்லாமல் அங்குள்ள வீடுகளுக்குச்சென்று உணவருந்தி வந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சிதிலமடைந்த பல கட்டடங்களையும், கோவில்களையும் நாம் புனரமைத்து கொடுத்துள்ளோம். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் ஜல்லிக்கட்டை பற்றி பேசுகிறார்கள். கடந்த 2014-ல் ஜல்லிக்கட்டுக்கு ராகுல்காந்திதான் தடைவிதித்து கையெழுத்திட்டார். ஆனால் முருகன் அருளால் ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக மக்களுக்கு நிறைய திட்டங்களை செய்துள்ளனர்.


கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் 2 முறை விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர். ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்தநாள் விழாவின்போது மோடியின் கையாலேயே பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 3 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கியுள்ளனர். அம்மா மினி கிளினிக்குகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சமீபத்தில் கூட வெளியான பட்ஜெட்டில் சாலை மேம்பாட்டு பணிக்காக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்காக ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை வழித்தடங்களை செயல்படுத்தி வருகிறோம். மதுரை பகுதியின் விரிவாக்கத்திற்காக எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட நிறைய திட்டங்களை நாம் செய்துள்ளோம்.

லஞ்சம், ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாது. தமிழகத்திற்கு வளர்ச்சியையும், நன்மையையும் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்பேரிலும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நமது கூட்டணியால் தான் செய்ய முடியும். உங்களிடம் ஒரு விஷயத்தை கேட்க வந்துள்ளேன், இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வதோடு பா.ஜ.க.வின் சங்கல்ப் யாத்திரையிலும் நீங்கள் இணைந்து வெற்றி பெற வேண்டும் என்றார் மத்திய அமைச்சர் அமித் ஷா.
 

Tags : bjp amith shah tamilnadu tn cm pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT