தமிழ்நாடு

வாக்குக்கு பணம் விநியோகம்: ரூ.17 ஆயிரம், திமுக பிரசுரங்களுடன் 2 பேர் கைது

1st Apr 2021 12:08 PM

ADVERTISEMENT

 

வேலூர்: அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக ரூ.17 ஆயிரம், திமுக துண்டுபிரசுரங்களுடன் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், அணைக்கட்டு தொகுதிக்கு உள்பட்ட அரியூர் அருகே தெல்லூர் கிராமத்தில் புதன்கிழமை இரவு வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருவதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிக்கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் வாக்காளர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்த நோட்டு, ரூ.17 ஆயிரம் ரொக்கம், திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமாருக்கு வாக்குகள் கோரும் துண்டுபிரசுரங்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது. வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, இருவரையும் போலீஸார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த ரூ.17 ஆயிரம், திமுக துண்டுபிரசுரங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
 

Tags : vote money Distribution
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT