தமிழ்நாடு

பாஜக தமிழகத்தில் கலாசாரப் படையெடுப்பை செய்து வருகிறது: கே.எஸ்.அழகிரி

1st Apr 2021 03:23 PM

ADVERTISEMENT

 

பாஜக தமிழகத்தில் கலாசாரப் படையெடுப்பை செய்து வருகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இ.திருமகன் ஈவெராவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஈரோடு மரப்பாலம் பகுதியில் வியாழக்கிழமை பேசியதாவது: 

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ரூ.70க்கு விற்ற பெட்ரோல் இப்போது ரூ.100க்கும், ரூ.442க்கு விற்ற சமையல் எரிவாயு உருளை ரூ.900த்துக்கும் விற்கப்படுகிறது. காங்கிகிரஸ் ஆட்சி காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலராக இருந்த போது, பெட்ரோல் விலை ரூ.70-க்கு விற்றோம். ஆனால் தற்போது 54 டாலராக உள்ளது. ரூ 35க்கு பெட்ரோல் விற்க வேண்டும். ஆனால் ரூ.100க்கு விற்கப்படுகிறது. சமையல் எரிவாயு உருளை 200க்கு விற்க வேண்டும். ஆனால் ரூ.900 விற்கப்படுகிறது.  

ADVERTISEMENT

மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதும் மன்மோகன்சிங் வகுத்துக்கொடுத்துள்ள பொருளாதாரக் கொள்கையை பின்பற்றி விலைவாசியை குறைப்பார். காய்கறி, மளிகை, ஜவுளி விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு. ஜிஎஸ்டி வரியும் தான் காரணம். இந்த இரண்டையும் மாற்றி அமைப்போம்.

திமுக, காங்கிரஸ் கட்சிகள் பெண்களை மதிப்பதில்லை என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். நான் பல்வேறு பிரதமர்களின் பேச்சைக் கேட்டுள்ளேன். தேர்தல் பிரசார கூட்டமாக இருந்தாலும் நாட்டின் வளர்ச்சி, விவசாயம், நீர்வளம் குறித்துதான் பேசுவார்கள். ஆனால் உள்ளூர் பிரச்னை குறித்து பேசமாட்டார்கள். ஆனால் மோடி தான் இப்படி பேசி உள்ளார்.  

உலக அளவில் இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. பொதுவுடமைக் கட்சி முதல் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி, சோனியாகாந்தியை தேசிய தலைவராக்கி உள்ளது. பாஜக ஒரு முறையாவது பெண்ணை அகில இந்திய தலைவர் ஆகி உள்ளதா?

இந்தத் தேர்தல்  தமிழகத்தை காப்பாற்ற, தமிழர்களின் உரிமைகளை, பெருமைகளை, கலாசாரத்தை காப்பாற்ற நடைபெறும் இறுதி யுத்தம். இந்த தேர்தலில் நாம் முழுமையாக வெற்றி பெற வேண்டும். 26 லட்சம் பேர் பேசும் சமஸ்கிருத மொழிக்காக மத்திய அரசு ரூ.640 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. ஆனால் 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழிக்காக மத்திய அரசு வெறும் ரூ.7 கோடி மட்டும்கதான் ஒதுக்கியுள்ளது.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தில் கலாசாரப் படையெடுப்பைச் செய்து வருகிறது. மோடி ஒரே மொழி, ஒரே கலாசாரம்,பண்பாடு என்கிறார். அதை முதல்வர், துணை முதல்வர் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். இந்தியாவில் ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கு மாநிலம் மொழி, கலாசாரம் வேறுபடும்.

அதிமுக ஊழல்கரை படிந்த கட்சி, நெடுஞ்சாலைத்துறையில் ரூ.2,500 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு தடையாணை வாங்கினார். 

இதனால் இரண்டு ஆண்டுகளாக விசாரிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றுகிறார். இதனால் பாஜகவுக்கு அதிமுக உண்மையான சிஷ்யனாக உள்ளது. தமிழகத்தில் பாஜகவை வேரோடு அகற்ற வேண்டும். தமிழக உரிமையை மீட்க வேண்டும் என்றார்.

Tags : பாஜக கே.எஸ்.அழகிரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT