தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் செங்குன்றம், புனித தோமையர்மலை, எழும்பூர் சரகம் மற்றும் அம்பத்தூர் சரக காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க உரிய பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்திட, சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய துணை இராணுவப் படையினர் ஒருங்கிணைந்து, முக்கிய மக்கள் கூடும், வசிப்பிட பகுதிகளில் காவல் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று (01.04.2021) காலை ஆ-4 செங்குன்றம், புனித தோமையர்மலை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர் ஆகிய காவல் நிலைய எல்லைகளில், காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் இராஜஸ்தான் காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, காவல் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.