தமிழ்நாடு

சோழிங்கநல்லூரில் அதிமுக-திமுக கடும் போட்டி!

1st Apr 2021 04:40 AM

ADVERTISEMENT


வாக்காளர்கள் எண்ணிக்கையில் தமிழகத்திலேயே பெரிய தொகுதியாக இருக்கும் சோழிங்கநல்லூரில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

தொகுதியின் சிறப்பு அம்சங்கள்:  ஒரு காலத்தில் சோலைவனமாகவும், சதுப்பு நிலக் காடுகளாகவும் காட்சியளித்த சோழிங்கநல்லூர் தொகுதி தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியில், மின்னல் வேக வளர்ச்சியை எட்டியது. இப்போது சோழிங்கநல்லூர் பகுதியில் சோலைவனத்துக்குப் பதிலாக தகவல் தொழில்நுட்ப பூங்காக்களையும்,அடுக்கு குடியிருப்புகளையும் கண்களுக்கு நிறைவாக காண முடிகிறது.

2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது,  தாம்பரம் தொகுதியில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது சோழிங்கநல்லூர் தொகுதி. இந்தத் தொகுதியில் ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோயில், சோழிங்கநல்லூர் மஹா ப்ரத்யங்கிரா தேவி கோயில், அக்கரை இஸ்கான் கோயில் ஆகியன முக்கியமான ஆன்மிகத் தலகளாகும். ஈஞ்சம்பாக்கம், கானத்தூர், அக்கரை, உத்தண்டி தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள்,திரையரங்குகள், உள்ளன. அதேபோல சென்னையில் பொழுதுபோக்கு மையமாகக் கருதப்படும் கிழக்கு கடற்கரைச் சாலையின் பெரும் பகுதி இத் தொகுதியிலேயே உள்ளது. நீலாங்கரை தொடங்கி, கானத்தூர் வரை இத் தொகுதிக்குள்ளே வருகிறது.

வாக்காளர்களின் விவரம்:  இந்தத் தொகுதியில் சென்னை மாநகராட்சியின் 192ஆவது வார்டில் இருந்து 200 வார்டுகள் வரை 9 வார்டுகள் உள்ளன. அதோடு 10 ஊராட்சிகளும்  இருக்கின்றன.  வன்னியர்கள், தலித்துகள், முதலியார், மீனவர்கள் ஆகியோர் பெரும்பான்மையாக உள்ளனர். முக்குலத்தோர், கிராமணி, வெள்ளாளர், பிராமணர் உள்ளிட்ட ஜாதியினர் குறிப்பிட்ட தகுந்த அளவில் வசிக்கின்றனர். 6.94  லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.  வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதற்கு, இங்கு புதிதாக வேகமாக உருவாகும் அடுக்குமாடி குடியிருப்புகளும், குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகளும் பிரதான காரணமாக கூறப்படுகிறது. பூர்வீக குடிமக்களைவிட, வெளியூர்களில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு வசிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.

ADVERTISEMENT

தொகுதியில் முக்கிய பிரச்னைகள்:  உயர் வகுப்பினரும்,வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களும் சரிசமமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்.  மேல்தட்டு மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னையிலேயே அதிகமாக இங்குதான் உள்ளது. அதேபோல கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய குடிசை மாற்று அடுக்குமாடி குடியிருப்புகளும் இத் தொகுதியிலேயே உள்ளன.

பிரம்மாண்டமான கட்டடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள்,பெரு வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இருந்தாலும், அடிப்படை வசதிகளில் இந்தத் தொகுதி பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. சென்னையில் மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாகக் கருதப்படும் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகியப் பகுதிகள் சோழிங்கநல்லூர் தொகுதியிலேயே உள்ளன.

இந்தப் பகுதிகளில் இருந்த நீர்நிலை கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால்,மழைநீர் குடியிருப்புகளுக்குள் தஞ்சமடைக்கிறது. தேங்கும் தண்ணீர் வடிவதற்கு, புதிதாக மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும் என  அப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதேபோல துரைப்பாக்கம், காரம்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பதினால், கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் காட்சியையும் காண முடிகிறது. பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அங்கு வசிக்கும் மக்கள் வலியறுத்துகின்றனர்.

மேலும் ராஜீவ்காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சோழிங்கநல்லூர் சிக்னல் பகுதி, துரைப்பாக்கம் சிக்னல் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

ராஜீவ் காந்தி சாலை உருவாக்கப்படும்போது துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் 4 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. சாலைகள் கட்டுமானத்துக்குரிய பணத்தை வசூலித்து முடித்துவிட்ட இந்தச் சுங்கச் சாவடிகள், இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன.  அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபடும் அரசியல் கட்சியினர், மக்களின் கவனம் வேறு பக்கம் திரும்பியதும் தங்களது வேலையை பார்க்கச் சென்றுவிடுகின்றனர். 

சுங்கச் சாவடிகளை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று விதிமுறைகள் இருக்கும் நிலையில், பகல் கொள்ளையில் ஈடுபடும் இவற்றுக்கு எந்த அரசியல் கட்சி முடிவு கட்டும் என்ற எதிர்பார்ப்புடன் சோழிங்கநல்லூர் தொகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

வேட்பாளர்கள் யார், யார்?

இந்த தொகுதி உருவாகிய பின்னர் மூன்றாவது சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது. ஏற்கெனவே நடைபெற்ற இரு தேர்தல்களில் அதிமுக, திமுக தலா ஒரு முறை வென்றுள்ளன. இந்த முறை அதிமுக சார்பில் கே.பி.கந்தன், திமுக சார்பில் அரவிந்த் ரமேஷ், தேமுதிக சார்பில்ஆர்.முருகன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்.ராஜீவ்குமார்,நாம் தமிழர் கட்சி சார்பில் மைக்கேல் வின்சென்ட் சேவியர் உள்பட 26 பேர் போட்டியிடுகின்றனர்.

2016ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் 1,47,014 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் லியோ என்.சுந்தரத்தை 14,913 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த முறையும் திமுக சார்பில் அரவிந்த் ரமேஷ் போட்டியிடுகிறார்.  2011-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.பி.கந்தன் மீண்டும் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

அரவிந்த் ரமேஷூம்,கந்தனும் சம பலத்துடன் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர். போட்டியில் 26 பேர் இருந்தாலும், அரவிந்த் ரமேஷூக்கும்,கந்தனுக்குமே வெற்றிக்கான வாய்ப்பு காணப்படுகிறது. தமிழகத்திலேயே மிகப்பெரிய தொகுதியான சோழிங்கநல்லூரை திமுக தக்க வைக்குமா? அல்லது அதிமுக மீண்டும் கைப்பற்றுமா? என்பதை மே 2-ஆம் தேதி வரை அனைவரும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வாக்காளர்கள் 

ஆண்கள்    3,48,262, 
பெண்கள்    3,46,476
திருநங்கைகள்    107
மொத்தம்    6,00094  
2016 தேர்தல் முடிவுகள் 

வாக்குகள் விவரம்: 
திமுக வெற்றி 
எஸ்.அரவிந்த் ரமேஷ் 
(திமுக)    1,47,014
லியோ என்.சுந்தரம் 
(அதிமுக)    1,32,101
கே.ராம்குமார் 
(பாமக)    15,595
- கே. வாசுதேவன்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT