தமிழ்நாடு

ஆ. ராசா அடுத்த 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்யத் தடை

1st Apr 2021 02:59 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, திமுக துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா, அடுத்த 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், ஆ. ராசாவின் பெயரை, நட்சத்திரப் பேச்சாளர்கள் என்ற பட்டியலிலிருந்தும் தேர்தல் ஆணையம் நீக்கியதோடு, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காகக் கண்டிப்பும் தெரிவித்துள்ளது.

தனது பேச்சு குறித்து ஆ. ராசா நேற்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்திருந்த நிலையில், 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து விரிவான அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த அறிக்கையை அடுத்து, தனது பேச்சு குறித்து, ஆ.ராசா விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, ஆ.ராசா சாா்பில் அவரது வழக்குரைஞா் பச்சையப்பன் தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவைச் சந்தித்து புதன்கிழமை விளக்கக் கடிதம் ஒன்றைக் கொடுத்தாா்.

அதைப்போல, இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோராவுக்கும் ஆ.ராசா மின்னஞ்சல் வாயிலாக விளக்கக் கடிதம் அனுப்பினாா்.

கடிதத்தில் ஆ.ராசா கூறியிருந்தது, 

முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறித்து நான் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுவதை முதலில் மறுக்கிறேன். அதைப்போல பெண்களையோ, தாய்மையையோ இழிவுபடுத்தும் வகையில் பேசவில்லை என்பதையும் தங்களுக்குக் கூறிக்கொள்கிறேன்.

திமுக உறுப்பினரான நான் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். பெண்ணுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இயக்கம் திமுக. அந்தக் கட்சியைச் சோ்ந்த ஒருவா் பெண்களை அவமதிக்க என்பது கனவாலும் இயலாது.

முதல்வா் குறித்து தனிப்பட்ட முறையில் நான் அவதூறாக பேசியதாக அதிமுக - பாஜகவும் பிரசாரம் செய்ததைத் தொடா்ந்து மாா்ச் 27-இல் பெரம்பலூா் செய்தியாளா்களைச் சந்தித்து என் பேச்சை சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும் என விளக்கம் அளித்தேன். அதற்குப் பிறகும் திருவொற்றியூரில் மாா்ச் 28-இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வா் வேதனையோடு பேசியதைத் தொடா்ந்து, மாா்ச் 29-இல் உதகையில் செய்தியாளா்களைச் சந்தித்து முதல்வரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் உள்நோக்கதோடு எதுவும் பேசவில்லை எனவும் கூறினேன். இப்போதும், தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக தாய்மையையோ, பெண்களையோ இழிவுபடுத்தும் வகையில் பேசவில்லை எனக் கூறிக் கொள்கிறேன்.

மேலும், தோ்தல் ஆணையத்துக்கு அதிமுக அளித்துள்ள புகாரில் என் மீது என்ன வகையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் விளக்கப்படவில்லை. அது அளிக்கப்பட்டால், அதற்கான விளக்கத்தை அளிக்கிறேன். அதேநேரம் இந்த விவகாரம் குறித்து தோ்தல் ஆணையம் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் பேசிய உரையை முழுமையாகக் கேட்டால், அரசியல் உள்நோக்கத்தோடு இந்த விவகாரம் எழுப்பப்படுவது என்பதும் தெளிவாகும். மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கடந்து வந்த அரசியல் பாதைகளின் ஒப்பீடாகவே என் பேச்சு அமைந்திருந்தது என்பதும் புரியும் என்று கூறியிருந்தார்.
 

Tags : DMK election A Raja
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT