தமிழ்நாடு

கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்: கனிமொழி எம்.பி.

1st Apr 2021 04:58 AM

ADVERTISEMENT


ராமநாதபுரம்/முதுகுளத்தூர்/பரமக்குடி: திமுக ஆட்சிக்கு வந்ததும் கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என திமுக மகளிரணிச் செயலரும், அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி தெரிவித்தார்.
திமுக வேட்பாளர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ( ராமநாதபுரம்) ,  ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் (முதுகுளத்தூர்), செ.முருகேசன் (பரமக்குடி- தனி) ஆகியோரை ஆதரித்து கனிமொழி புதன்கிழமை பேசியது:
திமுகவினர் பெண்களை இழிவுபடுத்துவதாக பிரதமர் கூறியுள்ளார். கண்ணியக் குறைவாக திமுகவினர் பேசக்கூடாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டித்ததுடன், சம்பந்தப்பட்டவரை மன்னிப்புக் கோரவும் வைத்துள்ளார். ஆனால், உத்திரப்பிரேதசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு எதிராக பாஜக மாநில அமைச்சர்கள் பேரணியில் கலந்துகொண்டபோது பிரதமர் ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தின் உரிமையையும், தமிழர்களின் நலனையும் காப்பதற்காக அதிமுக, பாஜக கூட்டணியை புறக்கணிப்பது அவசியம்.
மக்கள் குடிநீருக்காகவும், ரேஷன் கடைகளிலும் காத்துகிடக்கும் அவல நிலை உள்ளது. சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 1000 ஆக உள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மோடி தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் எதிரானவர். மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கூடுதல் நிதி வழங்கி விட்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் வெறும் ரூ. 12 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளனர்.
மக்கள் அனைவரும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதால் திமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளீர்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். நூல் விலை ஒரே சீராக இருக்க அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்யும். கூட்டுறவு வங்கிகள் ஏற்படுத்தப்படும். அரசு மருத்துவமனை நவீனமயமாக்கப்படும். பார்த்திபனூரிலிருந்து வலது மற்றும் இடது பிரதான கால்வாய் சீரமைக்கப்படும். நாட்டார் கால்வாய் மேம்படுத்தப்படும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT