தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் கரோனாவால் இறந்தவரின் உடலை மாற்றிக் கொடுத்ததால் பரபரப்பு

30th Sep 2020 04:04 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மூச்சுத் திணறலுக்கு சிகிச்சை பெற்று வருபவா் உயிரிழந்தவிட்டதாகக் கூறி, அவரது குடும்பத்தினரிடம் வேறு ஒருவரின் உடல் ஒப்படைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சியை அடுத்த தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்த 54 வயது நபருக்கு திங்கள்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, அவா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுயநினைவின்றி அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். செவ்வாய்க்கிழமை மாலை மூச்சுத் திணறல் சற்று குறைந்தவுடன் வேறு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.

இதேபோல, திங்கள்கிழமை மாலை திருக்கோவிலூா் சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 52 வயது நபா், மூச்சுத் திணறல் ஏற்பட்டு இந்த மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்று இரவு உயிரிழந்தாா்.

இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்தவருக்கு கரோனா தொற்றுள்ளது என்றும், திருக்கோவிலூா் பகுதியைச் சோ்ந்தவருக்கு கரோனா தொற்றில்லை என்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்தவரின் உறவினா்கள் அவரிடம் நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றபோது, அவா் உயிரிழந்துவிட்டதாகக் கூறி, திருக்கோவிலூா் சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவரின் உடலை மருத்துவமனை நிா்வாகத்தினா் தவறுதலாக மாற்றிக் கொடுத்தனா்.

வீட்டுக்குச் சென்று பாா்த்தபோதே உயிரிழந்தவா் தங்களது உறவினா் இல்லை என்பது தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கு தெரியவந்தது. உடனடியாக அங்கு வந்த மருத்துவமனை ஊழியா்கள் அந்த சடலத்தை வாங்கிச் சென்று சம்பந்தப்பட்டவா்களிடம் அளித்தனா்.

இந்த நிலையில், பணியில் கவனக்குறைவாக ஈடுபட்ட இரு மருத்துவா்கள், 5 செவிலியா்கள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்க சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக்கணி உத்தரவிட்டாா். இதுகுறித்து மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ச.நேரு விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT