தமிழ்நாடு

சிறுமி கொலை வழக்கில் இளைஞர் விடுதலை: தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

DIN

திண்டுக்கல் அருகே சிறுமி கொலை வழக்கில் இளைஞர் விடுதலையானதைத் தொடர்ந்து, தீர்ப்புக்கு எதிராக மாதர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அடுத்துள்ள ஜி.குரும்பப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். அவரது 12 வயது மகள், வாயில் மின் வயரை கடித்த நிலையில் மர்மமான முறையில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி உயிரிழந்தார். அதே நேரத்தில், அந்த சிறுமியின் உடலில் பல இடங்களில் நகக் கீறல்கள், காயம் இருப்பது கண்டறியப்பட்டது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென உயிரிழந்தது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு காரணமான அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சிறுமியின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வந்த வடமதுரை காவல்துறையினர், ஜி.குரும்பப்பட்டியைச் சேர்ந்த தங்கராசு மகன் கிருபானந்தம்(19) என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட நீதிபதி புருஷோத்தமன் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதில், கிருபானந்தம் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிருப்பிக்கப்படாததால் விடுதலை செய்வதாக அறிவித்தார். 

தீர்ப்புக்கு எதிராக கோஷம்:
தீர்ப்பு விவரத்தைக் கேட்பதற்காக உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட கிருபானந்தம் விடுதலை செய்யப்பட்டுவதாக அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர், காவல் துறை மீதும் நீதித்துறை மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்குத் தொடரப்படும் என ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வனஜா தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்தாவது:
35 சாட்சிகளை விசாரித்து உள்ளனர். கிருபானந்தம் கொடுத்த வாக்குமூலத்தில் பாலியல் வல்லுறவு செய்தேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கு மேல் என்ன சாட்சி வேண்டும். நீதிபதி தவறான தீர்ப்பு வழங்கி கொலையாளியை விடுதலை செய்துள்ளார். நீதிபதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் இந்த வழக்கில் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டுகிறோம். 

கொலையாளி கிருபானந்தம் திருச்சியிலிருந்து வழக்குரைஞரை அழைத்து வந்துள்ளார். ஆனால் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் இந்த வழக்கில் ஆஜராவில்லை. சிறப்பான தீர்ப்புகளை வழங்கிய இந்த நீதிமன்றம், முக்கியமான இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என்றார். தீர்ப்புக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT