தமிழ்நாடு

குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்

பெரியார் மன்னன்

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உணவின்றி தவிக்கும் காக்கைகளுக்கு, தினந்தோறும் காலை, மாலை இருவேளையும், சாலையோரத்தில் வியாபாரம் செய்து வரும் பெண்கள் இருவர் உணவு ஊட்டி வருகின்றனர்.

காக்கைகளுக்கு பரிவு காட்டும் பெண்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து  பாராட்டு குவிந்து வருகின்றது.

கடந்த மார்ச் 24-ம் தேதி முதல், நாடு முழுவதும் கரோனா தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட நகர்புறங்களில் வாழ்ந்துவந்த காக்கை கூட்டங்களுக்கு போதிய அளவில் இரை கிடைக்காமல் பரிதவித்து வந்தன.

இதனைக் கண்டு மனம் இறங்கிய, வாழப்பாடியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரத்தில் பழக்கடை வைத்துள்ள பெண் கலா(50) மற்றும் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலையோரத்தில் பூக்கடை வைத்துள்ள சுமதி ராஜன்(52). ஆகிய இருவரும் காக்கைகளுக்கு பரிவு காட்டி, தினந்தோறும் மிக்சர், பிஸ்கட் ஆகிய தின்பண்டங்களை வாங்கி உணவாக கொடுத்து வந்தனர்.

காக்கைக்கு உணவு வைக்கும் வாழப்பாடி பழக்கடை கலா.

குறிப்பிட்ட நேரத்தில் தினந்தோறும் காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து காக்கைகளுக்கு உணவு வழங்கி வந்ததால், இந்த இரு பெண்களிடம் பழகிக் கொண்ட காக்கைகள், தினம்தோறும் குறிப்பிட்ட நேரத்திற்கு இவர்களை தேடி வந்து அருகில் அமர்ந்து தங்களுக்கு இரை கேட்டு கரைந்து  அழைக்க ஆரம்பித்து விட்டன.

இதனால்,  காக்கைகளுக்கு உணவு வழங்குவதற்காக தங்களது சுய சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை தினந்தோறும் செலவிட்டு வருகின்றனர். 

இந்தப் பெண்களிடம், குழந்தைகளைப் போல நன்றாகப் பழகிக் கொண்ட காக்கைகள், இவர்களுக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டு, இவர்கள் கைகளில் வைத்துக்கொண்டு ஊட்டுகின்ற தின்பண்டங்களை, குழந்தைகளைப் போல அமர்ந்து உண்டு செல்கின்றன.

இந்த அரிய காட்சிகளை காணும் இப்பகுதி மக்கள், காக்கைகளுக்கு பரிவு காட்டும் இரு பெண்களுக்கும் பாராட்டு தெரிவித்து செல்கின்றனர்.

இதுகுறித்து அயோத்தியாபட்டணம்  பூக்கடை சுமதி ராஜன் கூறியதாவது: கடந்த ஏழு மாதங்களாக காக்கைகளுக்கு தினம் தோறும் காலை, மாலை இருவேளையும் காக்கைகள் விரும்பி உண்ணும் மிக்சர், பிஸ்கட் ஆகியவற்றை இறையாக கொடுத்து வருகிறேன். நன்றாக பழகி கொண்ட காக்கைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு தேடி வந்து, குழந்தைகள் பசிக்கு அழுவதைப் போலவே வேகமாக கரைந்து அழைத்து உணவை கேட்க ஆரம்பித்து விடுகின்றன. 

உடனே, குழந்தைகளுக்கு உணவூட்டி பசியாற்றுவதைப்போல,  இந்த காக்கைகளுக்கும் தினம்தோறும் உணவு ஊட்டி வருகிறேன். இது மனதிற்கு நிறைவை கொடுக்கிறதுஎன்றார்.

வாழப்பாடி பழக்கடை கலா கூறியதாவது:
மக்களை கண்டாலே வெகு தூரத்திற்கு பறந்து செல்லும் காக்கைகள் நன்றாக பழகி கொண்டதால், அருகில் வந்து அமர்ந்து, ஊட்டுகின்ற பிஸ்கட்டை தண்ணீரில் நனைத்து குழந்தைகளைப் போல  சாப்பிட்டுச் செல்கின்றன. சுயமாக சம்பாதித்து உழைத்து வருவாய் ஈட்டும் வரை, இந்த காகங்களுக்கு உணவு அளிக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.

காக்கைகளுக்கு உணவு வைத்து வரும் வாழப்பாடி பழக்கடை கலாவுக்கும்,  அயோத்தியாப்பட்டணத்தில்  காக்கைகளுக்கு உணவு ஊட்டி வரும் பூக்கடை  சுமதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதுவரை இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

SCROLL FOR NEXT