தமிழ்நாடு

பள்ளிகள் திறப்புக்கான அரசாணை நிறுத்திவைப்பு: முதல்வர் பழனிசாமி விளக்கம்

DIN


சென்னை: தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்று அனுமதி அளித்து, பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை நிறுத்திவைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதை அடுத்து, அதை மேலும் தளர்வுகளுடன் நீட்டிப்பது, கரோனா நோய்த் தொற்றின் நிலவரம் பற்றியும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர் பழனிசாமி,

கடந்த 29.8.2020 மற்றும் 8.9.2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி தமிழ்நாட்டில் 1.10.2020 முதல் அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதித்து 24.9.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை, இன்றைக்கு மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டம் நடைபெறுகின்றது. மருத்துவ நிபுணர்களுடைய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகின்றது. அவர்களுடைய கருத்தின் அடிப்படையில் அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

வேளாண் தொழிலுக்கு மட்டும் விலக்களித்து, முதலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், ஏழைகள், சிறு தொழில் செய்வோர், சிறு வணிகம் செய்வோர் போன்றோரின் பொருளாதார நிலை பாதிக்கப்படும் என்பதை அறிந்து, அவர்களை பாதுகாக்க தமிழ்நாட்டில், உணவுப் பொருட்களை விலையின்றி வழங்குதல், ரொக்க நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. பின்னர், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கரோனா காலத்தில் கூட, இதுவரை 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் துவங்குவதற்காக புரியதுணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம், சுமார் 31,464 கோடி ரூபாய் முதலீடும், சுமார் 69,712 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.

இந்நடவடிக்கைகளால், ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதை ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை சுமார் 1,63,000 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

முன்னதாக, தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டங்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 - ஆவது தளத்தில் நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர்களுடனும் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, கரோனா நோய்த் தொற்றுக்காக அமல்படுத்தப்பட்டு வரும் பொது முடக்கத்தில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT