தமிழ்நாடு

பல்கலை. பெயர் மாற்றத்தால் பாதிப்பில்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன்

29th Sep 2020 01:51 AM

ADVERTISEMENT


சென்னை: அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று  தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

பொறியியல் கலந்தாய்வுக்கான தர வரிசைப் பட்டியலை சென்னை தரமணியில் திங்கள்கிழமை  வெளியிட்ட  பின்னர் அளித்த பேட்டியின்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்: 

450-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை உள்ளடக்கியதுதான் அண்ணா பல்கலைக்கழகம். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சொல்வதுபோல பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளுக்கு மட்டும் அந்தப் பெயர் சொந்தமானது அல்ல. இந்த வளாகக் கல்லூரிகளின் பேராசிரியர்கள்தான் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மற்ற கல்லூரிகள் எதிர்க்கவில்லை. 

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் இருப்பவர்களை ஆராய்ச்சியில் அதிகம் ஈடுபடுத்த அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. பாதிப்பு இதில் யாருக்கும் வராது. மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் வாங்காமலும், சிறப்பு அந்தஸ்து பெறாமலும் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அரசு தருவதற்குத்தான் இந்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

ADVERTISEMENT

பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துவதற்கும், மாணவர்களின் வசதியை பூர்த்தி செய்வதற்கும் இதை செய்துள்ளோம். அரசு தெளிவானமுடிவை எடுத்துதான் அறிவித்துள்ளது.

3 நாள்களில் கல்விக் கொள்கை அறிக்கை:  புதிய கல்விக் கொள்கை குறித்து உயர்கல்வித் துறை ஆராய்ந்து அளிக்கும் தொகுப்புகள் வந்ததும், தமிழக அரசுக்குச் சாதகமானவைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, பாதகமானவைகள் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும். இதற்கான அறிக்கையை உயர்கல்வித் துறை சார்பில் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு இன்னும் 2அல்லது 3 நாட்களில் முடித்துவிடும்.

 விரைவில் அரியர் முடிவுகள்: 
பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அளித்த பரிந்துரையின்படி, அரசு அறிவித்ததுபோல் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் முடிவுகள் வெளியிடப்படும். 

தமிழகத்தைப் பொருத்தவரை, நம்முடைய கல்லூரிகள் கரோனா சிகிச்சை மையங்களாக இருக்கின்றன. மருத்துவமனை மட்டும் கரோனா மையங்களாக இருப்பது போதும் என்று அரசு அறிவித்த பின்னர்தான் கல்லூரிகள் திறப்பு பற்றி பேசமுடியும். அக்டோபர் மாதம் முழுவதும் அவகாசம் இருக்கிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT