தமிழ்நாடு

சாலைப் பணியில் முறைகேடு: மத்திய சாலைப் போக்குவரத்து கண்காணிப்பாளர் உள்பட 4 பேர் மீது சிபிஐ வழக்கு

29th Sep 2020 01:49 AM

ADVERTISEMENT


சென்னை: சாலைப் பணியில் முறைகேடு செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்பு பொறியாளர் உள்பட 4 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

இது குறித்து சிபிஐ தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னையில் உள்ள மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் கண்காணிப்புப் பொறியாளராக இருப்பவர் ர.இளவசரன். இவர், நெடுஞ்சாலைத் துறைப் பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகளை ஒதுக்குவதற்கும், ஒப்பந்ததாரர்கள் செய்து முடித்த பணிகளுக்கு பணம் வழங்குவதற்கும் லஞ்சம் வாங்குவதாக சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

அந்தப் புகார்களின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர். விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் பாறைசாலை பகுதியைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் கே.மணிகண்டன், செய்து முடித்த நெடுஞ்சாலைத் துறையின் ரூ.62.30 லட்சம் மதிப்புள்ள ஒரு பணிக்கும், ரூ.2.39 கோடி மதிப்புள்ள மற்றொரு பணிக்கும் அரசிடமிருந்து பணத்தை பெறுவதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் ரசீதுகளை சமர்பித்துள்ளார்.

ஆனால், அந்தப் பணிக்குரிய பணத்தை ஒதுக்குவதற்கு இளவரசன் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் ரூ.2.39 கோடி மதிப்புள்ள ரசீதுக்கு அனுமதி வழங்குவதற்கு ரூ.10 லட்சத்தை லஞ்சமாக, இளவரசனின் தரகராக செயல்படும் மதுரை கே.புதூர் அழகர் கோயில் சாலைப் பகுதியைச் சேர்ந்த ஓவு ரெட்டியின் மகன் சரவணகுமார் வங்கி கணக்கில் செலுத்துமாறு இளவரசன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதன்படி, அந்தப் பணத்தை மணிகண்டன் செலுத்தியுள்ளார். அதற்கு அடுத்த நாளே, ரூ.2.39 கோடி பணிக்குரிய அனைத்து ரசீதுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதையறிந்த சிபிஐ அதிகாரிகள்,இளவரசன், மணிகண்டன், ஓவு ரெட்டி, அவரது மகன் சரவணகுமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT