தமிழ்நாடு

பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு: அக். 8 - இல் பொதுப் பிரிவு கலந்தாய்வு

29th Sep 2020 01:11 AM

ADVERTISEMENT


சென்னை: பொறியியல் கலந்தாய்வுக்கான தர வரிசைப் பட்டியலை, சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை  வெளியிட்டார். 

பட்டியலை வெளியிட்டு அமைச்சர் கூறியது: 2020 - 21 - ஆம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர 1 லட்சத்து 60, 834 பேர் விண்ணப்பித்ததில், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, 1 லட்சத்து 12,406 பேர் தகுதியுடையவர்களாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். 

முதல் மூன்று இடங்கள்: தரவரிசைப் பட்டியலில் கோவையைச்  சேர்ந்த எம்.எஸ்.சஸ்மிதா,  திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆர்.நவநீதகிருஷ்ணன்,  நீலகிரி கீழ்குந்தாவைச் சேர்ந்த ஆர்.காவ்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

வரும் புதன்கிழமைக்குள் (செப்.30) மாணவ, மாணவிகள் தரவரிசைப் பட்டியலை சரிபார்த்து, தவறுகள் இருந்தால் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திடம் தெரிவித்தால் அவை  திருத்தப்படும். 

ADVERTISEMENT

கலந்தாய்வைப் பொருத்தவரையில், மாற்றுத்திறனாளிகள் பிரிவு, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் அக். 1 முதல் 5 - ஆம் தேதி வரை நடைபெறும். இதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 149 பேரும்,  விளையாட்டுப் பிரிவில் 1,409 பேரும், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பிரிவில் 855 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு வரும் 6 - ஆம் தேதி வெளியிடப்படும். 

பொதுப் பிரிவினருக்கு...: இதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கு வரும் அக். 8 முதல் 27 - ஆம் தேதி வரை 4 கட்டங்களாகவும், தொழிற்கல்விப் பிரிவு மாணவர்களுக்கு அக்.8 முதல் 15 - ஆம் தேதி வரை 2 கட்டங்களாகவும் கலந்தாய்வு நடக்க உள்ளது. 

தொடர்ச்சியாக துணைக் கலந்தாய்வு வருகிற அக்.28, 29 - ஆம் தேதிகளிலும், எஸ்.சி., எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்களுக்கு அக்.30 - ஆம் தேதியும் நடைபெற இருப்பதாக அமைச்சர் கூறினார்.

முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர், கட் ஆப் மதிப்பெண்
1.எம்.எஸ்.சஸ்மிதா (கோயம்புத்தூர்)    199.67
2.ஆர்.நவநீதகிருஷ்ணன் (திருவண்ணாமலை)    199.67
3.ஆர்.காவ்யா (நீலகிரி)    199.5
4.சி.ஆதித்யா (சென்னை)    199.5
5.ஆர்.பிரவீண்குமார்( திருவண்ணாமலை)    199.5
6.எஸ்.ஆர்.பி.நந்தினி (அரக்கோணம்)    199.33
7.லோகித்வேல் கோபிக்கண்ணன் (தேனி)    199.33
8.கே.சுதீப் (பொள்ளாச்சி)    199.33 
9.ஐ.ஷீபா கிரேஸ் (கன்னியாகுமரி)    199
10.குணால் வினோத்குமார் ஹிந்துஜா (மதுரை)    199

ADVERTISEMENT
ADVERTISEMENT