தமிழ்நாடு

கொண்டாட்டங்களும், சோர்வும்... அதிமுக செயற்குழுக் கூட்ட துளிகள்

29th Sep 2020 12:57 AM

ADVERTISEMENT


சென்னை: அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள் ஒவ்வோர் ஆண்டும் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் கரோனா நோய்த் தொற்று காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது.

மூன்று பகுதிகளாகப் பிரிப்பு: அதிமுக அலுவலகத்தில் செயற்குழுவில் பங்கேற்க சுமார் 295 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. அதில், 280 பேர் வரை கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் முதல்வர், துணை முதல்வர்,  அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 183 பேருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

 இந்தக் கட்டடத்துக்கு வலது மற்றும் இடதுபுறமுள்ள திறந்தவெளிப் பகுதிகளில் மீதமுள்ள உறுப்பினர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ஒரு பகுதியில் மாவட்டச் செயலாளர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். மற்றொரு புறத்தில் பெண் நிர்வாகிகள், பிற மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் கரோனா நோய்த்தொற்று தடுப்புக்கான முகக் கவசம், கையுறைகள் கொண்ட பை வழங்கப்பட்டது.

செல்லிடப்பேசிக்கு தடை: காலை 9 மணிக்குள்ளாக செயற்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான இருக்கைகளில் வந்து அமர்ந்தனர். முன்னதாக, அவர்களிடம் இருந்த செல்லிடப்பேசிகள் நுழைவு வாயிலிலேயே பெறப்பட்டன. இதனால், செல்லிடப்பேசிகள் இல்லாமல் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

பிரதான கட்டடத்தின் இருபுறமும் அமர்ந்திருந்த உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய எல்இடி திரை மூலமாக செயற்குழு நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. 

கூட்டத்தில் பங்கேற்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.05 மணிக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி 10.10 மணிக்கும் வந்தனர். அவர்கள் இருவரும், தலைமை அலுவலகத்தின் முகப்புப் பகுதியில் உள்ள கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன்பின் காலை 10.30 மணிக்குக் கூட்டம் தொடங்கியது. பிற்பகல் 3 மணி வரை கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை வரவேற்க சென்னை டிடிகே சாலையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாலையின் இருபுறமும் கட்சித் தொண்டர்கள் முகக் கவசம் அணிந்து பதாகைகளை ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர். 5 - க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவில் மேடைகள் அமைக்கப்பட்டு வாத்தியக் கருவிகளுடன் கட்சி நிர்வாகிகளுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.

வரும் சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக, செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். 

அவர்கள் காலையில்  கூட்டத்தில் பங்கேற்க வரும் கட்சியினரை உற்சாகம் பொங்க வரவேற்றனர். ஆனால், முடிவுகள் ஏதும் எடுக்காமல் கூட்டம் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றதால், கட்சியினர் சோர்வுடன் புறப்பட்டுச் சென்றனர். ஆலோசனைக் கூட்டம் நீண்ட நேரம் நடைபெற்றதால்,  பலர் சாலை ஓரங்களிலேயே அமர்ந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT