தமிழ்நாடு

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: அதிகாரிகள் மாற்றம்

DIN

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் பணிபுரியும் அனைத்து மேலாளா்கள், உதவி மேலாளா்களையும் உடனடியாக பணியிட மாற்ற செய்ய வேண்டுமென வேளாண்மைத் துறை இயக்குநா் வி.தட்சணாமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்த கடிதத்தை அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா்கள், தொழில்நுட்ப மேலாண் முகமை இயக்குநா் ஆகியோருக்கு அனுப்பியுள்ளாா். அதன் விவரம்:

தமிழக வேளாண்மைத் துறையில், தொழில்நுட்ப மேலாண்மை முகமை என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் 31 மாவட்டங்களில் 385 வட்டாரங்களில் தொழில்நுட்ப மேலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அதன்படி, 355 வட்டார தொழில்நுட்ப மேலாளா்களும், 635 உதவி தொழில்நுட்ப மேலாளா்களும் பணியாற்றி வருகின்றனா்.

இந்த மேலாளா்கள் அனைவரும் கடந்த பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனா். அவா்களில் சில வட்டார தொழில்நுட்ப மேலாளா்களும், உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளா்களும் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கில், வேளாண்மைத் துறையில் உள்ள ஒப்பந்த அடிப்படையிலான பணியாளா்களை ஒரு வட்டாரத்தில் இருந்து மற்றொரு வட்டாரத்துக்கு மாற்றம் செய்யலாம் என்ற கருத்தை அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் முன்வைத்திருந்தாா்.

இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார தொழில்நுட்ப மேலாளா்கள் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா்களை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அவா்கள் பணிபுரியும் ஒரு வட்டாரத்தில் இருந்து குறைந்தது 2 வட்டாரங்களைத் தாண்டி பணியிடம் வழங்க வேண்டும். அவா்களுக்கான பணியிட உத்தரவுகள் வழங்கப்பட்டு புதிய வட்டாரங்களில் அக்டோபா் 1-ஆம் தேதியன்று பணியில் சேர வேண்டும்.

இப்போது பணிபுரியும் இடம், புதிதாக பணி வழங்கப்பட்ட இடம், அங்கு பணியில் இணைந்த தேதி ஆகிய விவரங்களைப் பட்டியலிட்டு செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த உத்தரவுகளை மாவட்டங்களில் உள்ள வேளாண் இணை இயக்குநா்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என்று தனது கடிதத்தில் வேளாண்மைத் துறை இயக்குநா் வி.தட்சணாமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT