தமிழ்நாடு

மக்களுக்கு எதிரான எந்தச் சட்டத்தையும் எதிர்த்து குரல் கொடுப்போம்: காஞ்சி ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

DIN

மக்களுக்கு எதிரான எந்தச் சட்டத்தையும் எதிர்த்து குரல் கொடுக்க தயங்கமாட்டோம் என காஞ்சிபுரத்தில் வேளாண் சட்டங்களை கண்டித்து திங்கள்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிற வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் அருகே கீழ் அம்பி கிராமத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியது.. விவசாயிகளையும், சிறு வணிகர்களையும் அதிகமாக பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியவுடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இச்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். இச்சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினரும் இணைந்து 3500 இடங்களில் சுமார் 3.50லட்சம் பேர் கலந்து கொள்கிற ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது.மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து விவசாயிகளை வஞ்சித்து வருவதை மக்களுக்கு உணர்த்தவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். ஏழை மக்களுக்கு,விவசாயிகளுக்கு மத்திய அரசும், மாநில அரசும் இதுவரை எந்த நன்மையையும் செய்யவில்லை.

மத்திய அரசு நிறைவேற்றியருக்கும் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பலனில்லை என்றாலும் பரவாயில்லை. துன்பங்கள் வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் போராடுகிறோம்.இந்த சட்டங்களால் விவசாயிகளை தங்கள் சொந்த நிலத்திலிருந்தே விரட்டியடிக்கும் சூழ்நிலை வரப்போகிறது என்பதால் தான் வெளிப்படையாக எதிர்க்கிறோம். இச்சட்டத்தை எதிர்த்து ஹரியானா ரயில் மறியல் போராட்டங்களையும், பஞ்சாப் கடையடைப்பும், கேரளமாநிலம் ஆளுநர் மாளிகை முன்பும் போராட்டங்களையும் நடத்துகின்றன. கேரள மாநிலம் இச்சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் போக தயாராக இருக்கிறது. மேற்கு வங்காளம்,புதுதில்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் இச்சட்டங்களை முழுமையாக எதிர்க்கின்றன.பஞ்சாப்பில் இச்சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம் என்று அம்மாநில முதல்வர் சொல்லி இருக்கிறார்.இந்தச் சட்டத்தை இந்தியா முழுவதும் எதிர்க்கிறார்கள். தமிழகத்தில் திமுக மட்டும் தான்  எதிர்க்கிறது என்று ஒரு பொய்யான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நாங்கள் கவலைப்படவில்லை. எங்களைப் பொறுத்தவரை மக்களுக்கு எதிரான எந்தச் சட்டத்தையும் எதிர்த்துக் குரல் கொடுக்க எப்போதும் தயங்க மாட்டோம். 

தயங்கியதும் இல்லை.நாங்களும் இச்சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்வோம். கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் இந்தியா முழுவதுமே மக்கள் பல்வேறு அவதிகளுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில் இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கிறது எனத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலவரத்தையும்,கூச்சலையும் ஏற்படுத்தி இச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இச்சட்டத்துக்கு ஆதரவாக தமிழக அரசு இதுவரை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக ஆதரித்துக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.இச்சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதும் வேதனையளிக்கிறது. ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியாது என்கிறார் எடப்பாடி கே.பழனிசாமி.உண்மை தான் நான் விவசாயி இல்லை.ஆனால் அவர்களுக்கு துணையாக எப்போதும் இருப்பவன்.மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டம், புதிய கல்விக் கொள்கை,தற்போது நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் என மக்களுக்கு எதிரான எந்தச் சட்டமாக இருந்தாலும் திமுக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் இத்துடன் முடியப் போவதில்லை.

அடுத்த கட்டமாக அனத்துக்கட்சி தலைவர்களையும் ஒன்று கூட்டி ஆலோசித்து போராட்டங்களை தொடர்வோம் என்றும் பேசினார். ஆர்ப்பாட்டத்துக்கு திமுகவின் மாநில மாணவரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சி.வி.எம்.பி.எழிலரசன் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், திமுக தொண்டர்கள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக கீழ் அம்பி கிராமத்தில் வயலில் களை எடுத்துக் கொண்டிருந்தவர்களை நேரில் சந்தித்து வேளாண் சட்டங்கள் குறித்தும் மு.க.ஸ்டாலின் விளக்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

ரூ.8.30 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பாமக வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT