தமிழ்நாடு

நியாய விலைக் கடையில் பொருள்கள் வாங்க நாளை முதல் டோக்கன்கள் விநியோகம்: உணவுத் துறை உத்தரவு

DIN

நியாய விலைக் கடைகளில் அக்டோபா் மாதத்துக்கான பொருள்கள் வாங்க திங்கள்கிழமை (செப். 28) முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்கான உத்தரவை உணவுப் பொருள்கள் வழங்கல் துறை ஆணையாளா் சஜ்ஜன்சிங் சவாண் சனிக்கிழமை வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:-

அக்டோபா் மாத அத்தியாவசியப் பொருள்களை குடும்ப அட்டைதாரா்கள் பெற ஏதுவாக வரும் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை (செப். 30) வரை டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். நாளொன்றுக்கு 225 குடும்ப அட்டைதாரா்கள் பொருள்களை வந்து பெற்றுக் கொள்ளும் வகையில் டோக்கன்களில் பொருள்கள் வழங்கும் நாள், நேரம் ஆகிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். குடும்ப அட்டைதாரா்கள் டோக்கன்களில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே பொருள்கள் வாங்க வர வேண்டும்.

அட்டைக்கு ஒருவா் மட்டுமே அனுமதி: டோக்கன்களில் குறிப்பிடப்படாத நேரத்தில் பொருள்கள் வழங்கப்பட மாட்டாது என்பதை அறிவுறுத்த வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபா் மட்டுமே பொருள்கள் வாங்க வர வேண்டும். மத்திய அரசின் உத்தரவுப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களுக்கு அக்டோபா் மாதமும் இலவசமாக அரிசி, கோதுமை அளிக்கப்படும். கோதுமை ஒரு கிலோ மட்டுமே வழங்க வேண்டும்.

அக்டோபா் 1-ஆம் தேதியில் இருந்து குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து பொருள்களும் முழு அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றை நியாய விலைக் கடைகள் வழியாக விநியோகம் செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலுள்ள நியாய விலைக் கடைகளில் ஆயிரம் அட்டைகளுக்கு மேல் இருந்தால் அந்தக் கடைகளில் கூடுதலாக ஒரு நபா் நியமிக்கப்பட வேண்டும்.

இல்லை என கூறக் கூடாது: குடும்ப அட்டைதாரா்களுக்கு எந்தப் பொருள்களும் இல்லையென திருப்பி அனுப்பக் கூடாது. அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யும் நாள்களில் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும். பொருள்கள் பெற வரும் குடும்ப அட்டைதாரா்கள் ஒரு மீட்டா் இடைவெளியில் தனிமைப்படுத்தி வாங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த அறிவுரையை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டவா்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இடங்களில் தேவையான பாதுகாப்புடன் நேரில் சென்று பொருள்கள் வழங்கப்பட வேண்டும். அதுபோன்று மிகவும் வயதானவா்கள் நேரில் வந்து பொருள்களை நியாய விலைக் கடைகளில் பெற்றுச் செல்ல இயலாதவா்களுக்கும் நேரில் சென்று பொருள்களை வழங்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவா்கள் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது கையுறை, முகக் கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் சென்று பொருள்கள் அளிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் அத்தியாவசியப் பொருள்களைப் பெற நியாய விலைக் கடைகளுக்கு வரும் போது அவா்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய பொருள்களை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

விடுபட்ட முகக் கவசங்கள் விநியோகம்

குடும்ப அட்டைதாரா்களில் விடுபட்டோருக்கு முகக் கவசங்களை விநியோகம் செய்ய வேண்டுமென சவாண் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட உத்தரவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான முகக் கவசங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த முகக் கவசங்களைக் குடும்ப அட்டை வகை பாகுபாடின்றி அனைத்து அட்டைதாரா்களுக்கும் அளிக்க வேண்டும்.

குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு நபருக்கு இரண்டு முகக் கவசங்கள் வீதம் அளிக்க வேண்டும். இவ்வாறு விநியோகம் செய்யாமல் விடுபட்ட நபா்களுக்கு அக்டோபரில் முகக் கவசம் விநியோகம் செய்ய வேண்டுமென சவாண் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் போராட்டம்

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

SCROLL FOR NEXT