தமிழ்நாடு

திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு

27th Sep 2020 10:02 AM

ADVERTISEMENT


திருச்சியில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அந்தப் பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டத்திற்குள்பட்ட மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இந்த பெரியார் சமத்துவபுரம் முன்பாக தந்தை பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள், பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு இருப்பதையும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த மணிகண்டன் காவல்துறையினர் பெரியார் சிலை மீது பூசப்பட்டு இருந்த காவி சாயத்தை துடைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல செருப்பு மாலையும் உடனடியாக அகற்றப்பட்டது. பெரியார் சிலை பழையபடி முழுவதுமாக சீர் செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

உடனடியாக சீர் செய்யப்பட்ட பெரியார் சிலை

மேடை உடன் கூடிய இந்த வெண்கல சிலையின் தலைமீது காவி சாயம் ஊற்றப்பட்டு, அந்த காவி சாயம் அவரது மார்பு வழியாக வழிந்தோடி, கல்வெட்டுகளிலும் உள்ளது. 

எனவே, நடு இரவில் யாரோ மர்ம நபர்கள் யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த அவமதிப்புக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யக்கோரி அந்த பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அவர்களை சமாதானம் செய்த காவல்துறையினர் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை அருகே இருப்பதால் அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவமானது நடு இரவுவில் நடைபெற்றிருக்க வேண்டும் என தெரிகிறது. 

பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு சம்பவம் காட்டுத்தீ போல அந்த பகுதியில் பரவி வருகிறது. எனவே பதட்டமான சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சியினர், பெரியார் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன்,  திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த சில மாதங்களாக பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT