தமிழ்நாடு

டி.ஆர்.டி.ஓ.விலிருந்து மாயமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் தூத்துக்குடியில் மீட்பு

27th Sep 2020 10:29 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி: இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.விலிருந்து மாயமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் தூத்துக்குடியில் மீட்கப்பட்டுள்ளது. 

மும்பையில்  கடந்த சில ஆண்டுகளுக்கு 10  இரிடியம் பெட்டிகள் மாயமானது. இதுகுறித்து மும்பை நகர காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். களவுபோன இரிடியம் பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் தலா 6 இரிடியம் குழாய்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவற்றின் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

இதில் களவுபோன 10 இரிடியம் பெட்டிகளில் 3 பெட்டிகள் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்கு கிடைத்துள்ளது. கள்ளச்சந்தையில் இரிடியத்திற்கு விலை அதிகம் என்பதால் அதை விற்கும் பொருட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த தனது நண்பரான வைத்திலிங்கம் என்பவரிடம் ஒரு இரிடியம் பெட்டியை சுவாமிநாதன் கொடுத்துள்ளார்.

இதனை எடுத்துக் கொண்டு சுவாமிநாதன் அவருடைய நண்பரான முத்துராமலிங்கத்துடன் TN59 BB 0909 என்ற பதிவெண் கொண்ட இனொவா காரில் தூத்துக்குடி மாவட்டம் வந்துள்ளார். 

ADVERTISEMENT

தொடர்ந்து அவர்கள், தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதியம்புத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட சிவஜோதி தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். இதனை அறிந்த தூத்துக்குடியை சேர்ந்த தங்கம், மரியதாஸ், முருகன் ஆகியோர் கள்ளச்சந்தையில் இரிடியத்தை வாங்குவதற்காக அங்கு சென்றனர்.

இந்த முயற்சி குறித்த ரகசிய தகவல் புதியம்புத்தூர் போலீசுக்கு தெரியவந்தது. அதன்பேரில் அங்கு விரைந்த காவலர்கள் இரிடியம் கடத்தலில் ஈடுபட்ட வைத்தியலிங்கம், முத்துராமலிங்கம், தங்கம், மரியதாஸ், முருகன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 6 இரிடியம் குழாய்கள் அடங்கிய பெட்டியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து சிப்காட் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட இரிடியத்தின் மொத்த எடை 144 மில்லி கிராம் ஆகும்.

இதையடுத்து காரை சோதனை செய்ததில் அதில், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தல் குறித்து வைத்தியலிங்கத்திடம் தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்துகையில் தமிழகத்தில் சுவாமிநாதனுக்கு கிடைத்த 3 இரிடியம் பெட்டிகளில் ஒன்று திருச்சியிலும், மற்றொன்று நெய்வேலியிலும், மற்றொன்று தன்னிடமும் கொடுக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து வைத்தியலிங்கம் அளித்த தகவலின்படி இரிடியம் கடத்தலில் ஈடுபட்ட சுவாமிநாதன் மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்ய காவலர்கள் திருச்சி மற்றும் நெய்வேலிக்கு விரைந்துள்ளனர். அவர்களை கைது செய்த பிறகே இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்த விவரம் தெரியவரும் என காவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 

Tags : Iridium
ADVERTISEMENT
ADVERTISEMENT