தமிழ்நாடு

வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவாக துறை அமைச்சரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியும் பேட்டி கொடுப்பதா? டி.ஆர்.பாலு கண்டனம்

26th Sep 2020 05:45 PM

ADVERTISEMENT

வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவாக துறை அமைச்சரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியும் பேட்டி கொடுப்பதா? என திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாளை மறுதினம் - திராவிட முன்னேற்றக் கழகமும் - கூட்டணிக் கட்சிகளும் இணைந்து நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்ட அறிவிப்பு அதிமுக அரசைக் கதி கலங்க வைத்துள்ளது. ஊழலில் இருந்து தப்பிக்க - சி.பி.ஐ. ரெய்டில் சிக்காமலிருக்க- நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்களை ஆதரித்து வாக்களித்து விட்டு- இப்போது திருவிழா கூட்டத்தில் காணாமல் போனவர் முழிப்பது போல் அதிமுக அரசு திருதிருவென முழித்து நிற்கிறது. 

இந்தச் சூழலில்- நாட்டில் உள்ள விவசாயிகளும் - தமிழக விவசாயிகளும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எண்ணிக் கொந்தளித்துக் கொண்டிருப்பதைக் கொச்சைப்படுத்துகின்ற வகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களும் விவசாயிகளுக்கு நன்மை தருவதே தவிர அவற்றால் எவ்விதப் பாதிப்பும் இல்லை” என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்றைய தினம் தனது துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியுடன் அமர்ந்து அளித்துள்ள பேட்டிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முதலமைச்சர் பழனிசாமி ஆதரவளிக்கச் சொன்ன விவசாயிகள் விரோத மசோதாவை ஆதரித்துப் பேச வேண்டிய நிர்ப்பந்தம்“டெல்டா” மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சருக்கும், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் ஏற்பட்டிருப்பது உள்ளபடியே வருத்தமளிக்கிறது.

ஆகவே அமைச்சரும், அதிகாரிகளும் சேர்ந்து என்னதான் பிரச்சாரம் செய்தாலும் - அதிமுக அரசு விவசாயிகள் விரோத அரசு என்பது இந்த மசோதாக்களுக்கு ஆதரவளித்ததன் மூலம் உறுதியாகி விட்டது. தமிழகத்தில் விவசாயிகள் விரோத முதலமைச்சராகத் பழனிசாமி இருக்கிறார் என்பதும் நூற்றுக்கு இரு நூறு சதவீதம் நிரூபணம் ஆகி விட்டது. ஆகவே 28 ஆம் தேதி நடைபெற விருக்கும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டம்- இந்தச் சட்டங்களால் எத்தகைய கொந்தளிப்பிற்கு விவசாயிகள் உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தும். அப்போதாவது அதிமுக அரசு விழித்துக் கொண்டு - இந்த விவசாயி விரோத சட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

ADVERTISEMENT

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT