தமிழ்நாடு

எஸ்பிபி மறைவு - அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

DIN


பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, இன்று பிற்பகலில் அவரது உயிர் பிரிந்தது.

திரையிசை உலகில் மிகச் சிறந்த பின்னணி பாடகராக இருந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி: இந்திய இசை உலகத்திற்கு 20-ஆம் நூற்றாண்டில், இறைவன் அளித்த இனிய கொடையாக வந்து உதித்தவர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன். “ஆயிரம் நிலவே வா” என்ற புகழ் வாய்ந்த பாடலை அவர் தான் பாட வேண்டும் என்று காத்து இருந்து வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆர். அவர்களின் இதயத்தில் இடம் பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியன். அன்னாரது குரலில் நேற்றும், இன்றும், நாளையும் ஒலிக்கும் “தங்கத் தாரகையே வருக வருக, தமிழ் மண்ணின் தேவதையே வருக வருக” என்ற மறைந்த ஜெயலலிதாவின் புகழ் பாடும் பாடல், திமுக வரலாற்றில் என்றும் இணைந்திருக்கும். 

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்: எஸ்.பி பாலசுப்பிரமணியம் திரையிசை உலகில் ஒரு சகாப்தமாக விளங்கினார். தனது இன்னிசைத் தேன் குரலால் லட்சக்கணக்கான இசை ரசிகர்களை மட்டுமல்ல அவரது பாடலைக் கேட்கும் அனைவரையும் ஈர்த்து தன் வசமாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார் பாடலுக்கு என்றே பிறந்தவர் எஸ்பிபி என்று சொல்லுமளவிற்கு, 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, அதிக எண்ணிக்கையிலான பாடலை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சாதனை படைத்தவர் ஆவார்.

மு.க. ஸ்டாலின்: எஸ்பிபி மறைவு, இசை உலகிற்கு பேரிழப்பாகும். நான் உட்பட அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்களின் சொந்த குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே இதனைக் கருதுகிறோம். 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதுடன், பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக்குரல் கொடுத்தும் பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகள், திரைத்துறை விருதுகளால் பெருமை பெற்றவர். கருணாநிதியின் அன்பிற்குரியவர்.

துரைமுருகன்: திரை உலகில் இசையின் இமயமாக உயர்ந்து நின்றவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். அந்த இமயம் இன்று சரிந்து விழுந்துவிட்டது. நிரப்பப்ப முடியாத இடம் பாலுவின் இடம். இசைக்கடல், தன் ராக ஆலாபனை அலைகளை ஆடாமல் நிறுத்திக் கொண்டது. இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு எஸ்.பி.பி. புகழ் நிலைத்து நிற்கும்.

ராமதாஸ்: எனக்கு மிகவும் பிடித்த, புகழ்பெற்ற பின்னணி இசைப்பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அவரது மறைவு இசையுலகிற்கு ஈடு செய்ய முடியாது இழப்பு. அவரது பாடல்கள் ஒலிக்கும் வரை அனைவரின் மனங்களிலும் அவர் வாழ்வார்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும், நண்பர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகபெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ: தன் கானக் குரலால் கோடானு கோடி இதயங்களை ஈர்த்தவரும், 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணத்தோடு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி, மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது. உயிர் ஓய்யது உடலால் அவர் மறைந்தாலும், யாழ் மீட்டுவது போன்ற அவரது கானக் குரல் இன்னும் எவ்வளவு காலமானாலும் காற்றோடு கலந்திருக்கும். கேட்போரைக் காந்தமெனக் கவர்ந்திழுக்கும். திரைப்பட இசை உலகில் அழியாப் புகழோடு நிரந்தரமாக வாழ்வார். அந்தப் பாடல் இசை மேதையை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கணக்கற்ற அவரது ரசிகர்களுக்கும், அவரை உயிராய் நேசித்த கலை உலகப் பெருமக்களுக்கும் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி: இந்தியாவின் தலைசிறந்த பாடகரும், 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி உலகப் புகழ் பெற்ற எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட 6 தேசிய விருதுகளைப் பெற்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடகரை இன்று இழந்திருக்கிறோம். தமது பாட்டு திறமையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த பேராற்றல் மிக்கவர் எஸ்.பி.பி. நாட்டு மக்களை, குறிப்பாக தமிழக மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இழப்பு என்பது ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும். இன்னொரு எஸ்.பி.பி.யை எப்போது காணப் போகிறோம் ? அவரது இடத்தை யாரால் நிரப்ப முடியும் ?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT