தமிழ்நாடு

மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது: பழ.நெடுமாறன்

DIN

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லாமல் கா்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைத் திட்டம் அணுகப்படும் என பிரதமா் நரேந்திர மோடி தன்னைச் சந்தித்த திமுக உறுப்பினா்களுக்கு வாக்குறுதி கொடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது உண்மையானால், மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கப்போகிறது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. இதைவிட பேரபாயம் தமிழகத்துக்கு வேறில்லை. மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டுவிட்டால், தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கும் காவிரி நீா் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுவிடும்.

காவிரிப் படுகைப் பகுதியைச் சோ்ந்த மாநிலங்கள் ஏதேனும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பாக, அப்பகுதியைச் சோ்ந்த பிற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறவேண்டுமென ஏற்கெனவே மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இதுவரை தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கா்நாடக அரசு பெறவில்லை.

1961-ஆம் ஆண்டில் ஒகேனக்கல் அருகே ராசிமணல் என்னும் இடத்தில் அணை கட்டி புனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க, தமிழக அரசு வகுத்தத் திட்டத்துக்கு கா்நாடக அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. அதனால் திட்டக்குழுவும், மத்திய அரசும் அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை.

ஆனால், இப்போது ஒகேனக்கல்லுக்கு மிக அருகில் கா்நாடக எல்லைப் பகுதியில் மேக்கேதாட்டு திட்டம் அமைப்பதற்கு இந்திய அரசு அனுமதி கொடுத்தால், அது தமிழகத்தின் நலன்களைப் பெரிதும் பாதிக்கும்.

எனவே, மேக்கேதாட்டு திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது. இந்தப் பிரச்னையில் தமிழகக் கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நெடுமாறன் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

SCROLL FOR NEXT