தமிழ்நாடு

திருநள்ளாறு அருகே குளம் வெட்டும்போது சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

23rd Sep 2020 06:33 PM

ADVERTISEMENT

 

திருநள்ளாறு  அருகே ஒருங்கிணைந்த பண்ணைக்காகக் குளம் வெட்டும்போது, பெருமாள், காலிங்க நர்த்தன கிருஷ்ணன் உலோகச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே சேத்தூர் கிராமத்தில் ஸ்ரீ பிரதாப சிம்மேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் சார்ந்ததாக திருவாசல் நகரில் மிகவும் பழைமையான  ஸ்ரீ லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது.

பிரதாப சிம்மேசுவரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், புதுச்சேரி  அரசின் வட்டார வளர்ச்சித் துறை சார்பில், மகளிர் குழுவினர் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து சுய வருவாய் பெருக்கத்திற்காக நிலம் குத்தகை அடிப்படையில் தரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலத்தில் வட்டார வளர்ச்சித்துறை சார்பில் மீன் வளர்ப்புக்கான திட்டத்தில் குளம் வெட்டும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் புதன்கிழமை நடைபெற்றுவந்தபோது, அதில் சுவாமி சிலைகள் இருப்பது போல் தெரியவந்தது. உடனடியாக பணியை நிறுத்திவிட்டு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அந்த பகுதிக்கு காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் ரகுநாயகம், ஆய்வாளர்  பாலமுருகன், வட்டாட்சியர்  பொய்யாதமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி ஆரோக்கியதாஸ் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். 

அதிகாரிகள் முன்னிலையில் மேலும் தோண்டப்பட்டபோது, உலோக சுவாமி சிலைகள் 2, பீடம் ஒன்று எடுக்கப்பட்டது. பெருமாள் உருவத்தில் இருந்ததால், வட்டாட்சியார்கள் வரவழைத்து பார்த்து, இது வரதராஜப் பெருமாள் சிலை என்றும் காலிங்க நர்த்தன கிருஷ்ணன் சிலை என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. கரையில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு அந்த பகுதியினர் மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

இது குறித்து வட்டாட்சியர் பொய்யாதமூர்த்தி கூறுகையில், 

கோவிலுக்கு சொந்தமான இடத்திலேயே சுவாமிகள் சிலைகள் கிடைத்துள்ளது. இந்த சிலைகள் ஐம்பொன்னால் ஆனதா என்று உரிய ஆய்வுகளுக்குப் பின்பே தெரியவரும். கண்டெடுக்கப்பட்ட சிலைகளை துணை ஆட்சியரிடம் ஒப்படைத்துவிடுவோம். அவரது உத்தரவின்பேரில் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

சிலைகளை ஆய்வு செய்வது தொடர்பாக ஆட்சியர் உத்தரவிட்ட பின்னர், இதன் உயரம், நீளம் மற்றும் ஐம்பொன் போன்ற முழு விபரங்கள் உறுதியாகத் தெரிய வரும். இது சோழர் காலத்துச் சிலைகளாக இருக்கும் என்றும், சுமார் ஒன்றரை அடி உயரத்தில் இருக்கிறது என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT