தமிழ்நாடு

குடி கெடுத்த குடி: விழுப்புரத்தில் தாய், மகள் தற்கொலை, சிகிச்சையில் மற்றொரு மகள்

23rd Sep 2020 10:10 AM

ADVERTISEMENT

விழுப்புரம்: கணவரின் குடிப்பழக்கம் மற்றும் கடன் சுமை காரணமாக விழுப்புரத்தைச் சேர்ந்த தாய், மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம், சித்தேரிக்கரை, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (40). கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி கவிதா(35). இவர்களுக்கு பவித்ரா(17), சர்மிளா(13) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், கஜேந்திரன் மதுவுக்கு அடிமையாகி வீட்டில் மனைவியிடம் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார். மேலும், கஜேந்திரன் முறையாக வேலைக்கு செல்லாததால் குடும்பம் வறுமையில் தவித்து வந்தது. இதனால் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தனர். இதன் காரணமாக கடன் சுமையும் அதிகரித்தது. இதோடு, கணவரின் கொடுமை தாங்க முடியாமல் கவிதா தனது இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

இதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை கோவிலுக்கு செல்வதாகக் கூறி தனது இரு மகள்களுடன் கவிதா வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இரவு வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவர்களை தேடி வந்தனர்.

ADVERTISEMENT

இந்த சூழலில் அதேபகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே கவிதா மற்றும் அவரது இரண்டு மகள்களான பவித்ரா, ஷர்மிளா ஆகியோர் விஷம் அருந்திய நிலையில் கிடந்ததை புதன்கிழமை காலை கண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து விழுப்புரம் நகர போலீஸார் நேரில் சென்று பார்வையிட்டனர். அதில் விஷமருந்தியதில் கவிதா, பவித்ரா ஆகியோர் இறந்தது தெரியவந்தது.

அப்போது உயிரோடு மயக்க நிலையில் இருந்த இளைய மகள் சர்மிளாவை போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : தற்கொலை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT