தமிழ்நாடு

உரிமைமீறல் குழு நோட்டீஸை எதிர்த்து திமுக எம்எல்ஏக்கள் வழக்கு : நாளை இடைக்கால உத்தரவு

23rd Sep 2020 03:08 PM

ADVERTISEMENT

 

சென்னை: உரிமைமீறல் குழு நோட்டீஸை எதிர்த்து திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளன. இந்த நோட்டீசின் அடிப்படையில் மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதன்பின்னரும், மனுதாரர்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் கருதி, உரிமைமீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என உத்தரவிட்டிருந்தது. 

இதனையடுத்து உரிமை மீறல் குழு கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர். சண்முகசுந்தரம், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள்களை இடமாற்றுவது, பதுக்குவது, விற்பனை செய்யத்தான் தடை இருந்தது. வெளியில் கிடைத்தவற்றை அரசின் கவனத்துக்குக் கொண்டு வரவே பேரவைக்கு குட்காவை எடுத்து வந்து காண்பித்தனர்.கடந்த 2017-ஆம் ஆண்டு அனுப்பிய நோட்டீசில் அடிப்படை தவறு இருப்பதாக கூறி அதனை  தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. குட்கா வைத்திருந்தால் அது குற்றமா இல்லையா என்பது நீதிமன்றத்தில் முடிவெடுக்க வேண்டிய விவகாரம் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே விவகாரத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக வாதிட்டார்.

அப்போது திமுக எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் என்.ஆர்.இளங்கோ, அமீத் ஆனந்த் திவாரி  ஆகியோர், குட்கா போதைப்பொருள் வணிகத்துக்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர பேச்சு சுதந்திரத்துக்கு தடை விதிக்கவில்லை. அதன் அடிப்படையில் தான் குட்கா கிடைப்பது குறித்த பிரச்னை பேரவையில் எழுப்பப்பட்டது. ஆனால் உள்நோக்கத்துடன்  இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்த அதே குழுதான் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டப்பேரவை விதி 228-ஐ மீறும் வகையில் மீண்டும் குழு அமைக்கப்பட்டு, குட்கா விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக மீது முழுக்க அதிருப்தியில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அந்தக் குழுவில் இருப்பதாக வாதிடப்பட்டது.

அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்கக்கூடாது.  உரிமை மீறல் குழு  பேரவைத் தலைவருக்கு பரிந்துரை மட்டுமே செய்யும். பேரவை தலைவர் தான் முடிவெடுப்பார். திமுக எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்குகிறோம். இதுதொடர்பாக  விரைவில் பதில் மனுத்தாக்கல் செய்வதாகவும், எனவே தடை விதிக்க வேண்டாம் என வாதிட்டார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீர்ப்பளித்தது.  உரிமை மீறல் குழு விரைவாக கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியே மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குட்காவை காண்பிக்க கூடாது என அரசாணையில் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே மனுதாரர்கள் வெளியில் எளிதாக குட்கா பொருள்கள் கிடைப்பதை காண்பிக்கதான் பேரவைக்குள் எடுத்து வந்தார்கள் என்பதை தலைமை நீதிபதி உத்தரவிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த  வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.
 

Tags : high court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT