தமிழ்நாடு

தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை: ஆர்.பி. உதயகுமார்

23rd Sep 2020 11:09 AM

ADVERTISEMENT

சென்னை: மருத்துவக்குழு, வல்லுநர் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அளிக்கும் அடிப்படையில் படிப்படியாக தளர்வுகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் தற்பொழுது பொது முடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான சூழல் எழவில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று சென்னை புரசைவாக்கம், தானா தெருவில் நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து, கரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகனத்தையும் ஆய்வு செய்தார். 

பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்தில் 12,134 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,704 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 513 பேர் மருத்துவமனையிலும், 38 பேர் கோவிட் கேர் சென்டரிலும், 562 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி 500 பேருக்கு மேல் இம்மண்டலத்தில் பரிசோதனை செய்யப்படுகின்றனர். 7% குறைவாகவே தொற்று கண்டறியப்படுகிறது. சென்னையில் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இருந்த போதிலும், பொதுமக்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது. கரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி 85,000-க்கும் மேல் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிக பரிசோதனைகளை நடத்துகிறது. கரோனா நோயாளிகளை ஆரம்பத்திலே கண்டறிவதால் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழக முதல்வர் கரோனா தொற்று காலத்திலும் மாவட்டம் தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி விழிப்புணர்வு, கள நிலவரங்களை ஆய்வு செய்தும் வருகிறார்கள். கரோனா காலத்திலும் மாவட்டம் தோறும் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், திறந்து வைத்து வருகின்றார்கள். வேளாண் மசோதாவில் விவசாயிகளை பாதிக்கும் எந்த அம்சமும் இல்லை. ஆகவே, விவசாயிகளிடம் வேளாண்மை மசோதாவின் நம்மைகளை அரசின் சார்பில் எடுத்து செல்வோம் என்றார். கடலூர், கோவை, திருப்பூர் போன்ற மற்ற மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகளை மாவட்ட அமைச்சர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். தற்பொழுது பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் குறைந்த அளவு போக்குவரத்து மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்க படிப்படியாக கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 

ADVERTISEMENT

இன்று மாலை பிரதமருடன் நடைபெறும் கூட்டத்தில் வழிமுறைகள் எவ்வாறு பின்பற்றபடுகிறது என்பது குறித்து முதல்வர் ஆலோசனை செய்வார். மேலும், மருத்துவக்குழு, வல்லுநர் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அளிக்கும் அடிப்படையில் படிப்படியாக தளர்வுகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் தற்பொழுது பொது முடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான சூழல் எழவில்லை என்றார்.

முன்னதாக தானா தெருவில் அமைக்கப்பட்ட காய்ச்சல் முகாமை பார்வையிட்டு அங்கு மக்களுக்கு சானிடைசர், முகக்கவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். 

Tags : lockdown tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT