தமிழ்நாடு

ரூ.14,000 கோடியில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகா் ஆகிய மாவட்டங்கள் பயனடையும் வகையில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் வரும் 2021 ஜனவரியில் தொடங்கி நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முடிவுற்ற அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும், சீன ராணுவத்தால் உயிரிழந்த ராணுவவீரா் பழனி மனைவி வானதிதேவிக்கு அரசுப் பணிக்கான ஆணையையும், 9 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். பின்னா் அவா் கரோனா பரவல் தடுப்புப் பணி ஆய்வு மற்றும் தொழிலதிபா்கள், விவசாயிகள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினருடன் கலந்தாலோசனை நடத்தினாா்.

அதன்பின்னா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக அரசு விவசாயிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி இதுவரை யாரும் செயல்படுத்தாத வகையில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ.14 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படவுள்ளது. ஆண்டுதோறும் மேட்டூா் அணையிலிருந்து உபரி நீரானது கடலில் கலக்கிறது. அந்த நீரை காவிரி-குண்டாறு திட்டத்தின் மூலம் நீா் நிலைகளில் நிரப்பி, நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. திட்டத்தில் 259 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டப்பட்டு கரூா், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகா் ஆகிய மாவட்டங்கள் பயனடையும் வகையில் பணிகள் நடைபெறும்.

வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்படவுள்ளது. திட்டப் பணிகள் மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். திட்டத்துக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி முதல் குண்டாறு வரை 259 கி.மீ. நீளமுள்ள கால்வாய் வெட்டப்படவுள்ளது. முதல் கட்டத்தில் முதல் பணியாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரையில் 118 கி.மீ. தூரம் வரை கால்வாய் வெட்டப்படும்.

இரண்டாம் கட்டப் பணியாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரையில் 108 கி.மீ. வரை கால்வாய் வெட்டப்படும். திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணியாக வைகை முதல் குண்டாறு வரையில் 33 கி.மீ. தூரம் கால்வாய் வெட்டப்படும். தற்போது முதல் கட்டப்பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கரூா், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நில எடுப்பு செய்வதற்கு அரசாணை வழங்கப்பட்டு, வருவாய்த் துறையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நில எடுப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

நடப்பு நிதியாண்டில், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டப் பணிகள் செயல்படுத்தும்போது, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பயன்பெறும்.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாயானது மானாமதுரை வட்டம், இடைக்காடு கிராமத்தில் வைகை நதியை கடந்து செல்கிறது. அந்த இடத்தில் 1,500 கனஅடி நீரை வைகை நதியில் திருப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், ஊருணிகள், குட்டைகள் அனைத்தும் நிரப்பப்படும். திட்டத்தில் 1 லட்சம் ஏக்கா் பரப்பளவு பாசன வசதி ஏற்படும்.

திட்டத்திற்கு தோராயமாக ரூ.14,000 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தைப் போல தமிழகத்தில் அதிக செலவில் எந்தத் திட்டமும் நடைபெறவில்லை. ஆகவே, விவசாயிகளின்

நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுகின்ற ஒரே அரசு அதிமுக அரசுதான்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்தூா், ஆா்.எஸ்.மங்கலம், கமுதி, திருவாடானை ஆகிய பகுதிகளில் 382 கிராமங்களில் நீா் நிலைகளில் தண்ணீா் நிரப்பப்படும். நிலத்தடி நீரும் செறிவூட்டப்படும் என்றாா்.

அமைச்சா்கள் கடம்பூா் ராஜூ (செய்தி மற்றும் விளம்பரத்துறை), ஆா்.பி.உதயகுமாா் (வருவாய்த்துறை), பாஸ்கரன் (கதா் கிராமத் தொழில்) மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.மணிகண்டன் (ராமநாதபுரம்), எஸ்.கருணாஸ் (திருவாடானை), சதன்பிரபாகா் (பரமக்குடி), ரத்தினசபாபதி (அறந்தாங்கி) மற்றும் முன்னாள் அமைச்சா் ஏ.அன்வர்ராஜா, ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.ஏ.முனியசாமி ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT