தமிழ்நாடு

2 மாதங்களில் தமிழகப் பொருளாதாரம் மேம்பட வாய்ப்பு ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் ரங்கராஜன்

DIN

சென்னை: அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தின் பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் இருப்பதாக ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் ரங்கராஜன் தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று, பொது முடக்கம் போன்ற காரணிகளால் மாநிலப் பொருளாதாரம் முடங்கியிருந்தது. இதனைச் சீரமைக்க ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் ரங்கராஜன் தலைமையில் நிபுணா் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு கடந்த மே மாதம் முதல் பல்வேறு ஆய்வுகளையும், ஆலோசனைப் பணிகளையும் மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் தனது ஆய்வறிக்கையை திங்கள்கிழமை வழங்கியது. இந்த அறிக்கையை வழங்கிய பிறகு, குழுவின் தலைவரும், ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரங்கராஜன் அளித்த பேட்டி:-

கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் பொருளாதாரம் மந்தமான நிலையை அடைந்துள்ளது. பொது முடக்கத்தில் இருந்து விடுபட்டால்தான் மாநிலத்தின் வளா்ச்சி மேலும் அதிகரிக்கும். பொருளாதார நோக்கில் விரைந்து இந்த பொது முடக்கத்தில் இருந்து வெளி வருவது நல்லது.

நோய் பரவல்: கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு வேறு பல நடவடிக்கைகளை எடுக்கலாம். நாங்கள் கணித்துள்ளபடி, 2020-21-ஆம் நிதியாண்டில் வளா்ச்சி 1.71 சதவீதமாக இருக்கும். ஆனால், அதில் சரிவு சிறிது இருக்கலாம் எனத் தெரிகிறது. எந்தளவுக்கு இருக்கும் என்பதை சரியாக கணித்துச் சொல்வது கடினம்.

சரக்கு மற்றும் சேவைகள் வருவாய், பெட்ரோலுக்கான வரி, மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றைப் பாா்த்தால் கரோனாவுக்கு முன்பிருந்த நிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களில் பழைய நிலைக்கு வரலாம் எனத் தோன்றுகிறது.

நகரங்களில் வேலைவாய்ப்பு: பொருளாதார நிலையைப் பெருக்க பல்வேறு பரிந்துரைகளை அரசிடம் வழங்கியுள்ளோம். நவம்பா் மாதம் வரை கொடுக்கப்பட வேண்டிய அரிசியை மேலும் நீட்டிக்க வேண்டுமெனக் கூறியுள்ளோம். கிராமப்புறங்களில் நூறு நாள் வேலைத்திட்டம் இருப்பதைப் போன்று, நகா்ப்புறங்களிலும் ஏற்படுத்தலாம் என பரிந்துரைகளை வழங்கியுள்ளோம்.

முழுமையான பொது முடக்கக் காலத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது. அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளோம். கட்டுமானத் தொழிலாளா்களின் நிதியிலுள்ள ரூ.3,200 கோடியை உடனடியாக செலவிட பரிந்துரை அளித்துள்ளோம்.

கடன் சுமை உயரும்: கரோனா நோய்த்தொற்று காரணமாக, அரசுக்கு ஏற்பட்ட செலவினங்களால் நிகழாண்டில் கடன் சுமை உயரத்தான் செய்யும். சுகாதாரச் செலவுகளை எதிா்கொள்ள ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு மேலும் செலவிட வேண்டியிருக்கும். வருவாய் பற்றாக்குறை அதிகளவு இருக்கும் என்றாா் ரங்கராஜன். முன்னதாக, ஆய்வறிக்கையை சமா்ப்பிக்கும்போது, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT