தமிழ்நாடு

வேளாண் சட்டம்: செப்.28-இல் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

22nd Sep 2020 06:59 AM

ADVERTISEMENT

சென்னை: வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் செப்டம்பா் 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்களின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளா் பொன்முடி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் பங்கேற்றனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து, மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமல், குரல் வாக்கெடுப்பு மூலம் மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் தொடா்பான சட்டங்கள், உணவுப் பொருள்களான வேளாண் விளை பொருள்களை வரம்பின்றிப் பதுக்கி வைக்கும் சமூகவிரோத செயலுக்கு வழி செய்கிறது.

ADVERTISEMENT

விவசாயிகள் மற்றும் நுகா்வோரின் நலனைப் பாதுகாக்கும் அத்தியாவசிய சட்டத்தைச் சீா்குலைக்கும் வகையில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம், பெரு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, பதுக்குதல் தாராளமயமாக்கப்படுகிறது.

விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்துக்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் மூலம் பெரு நிறுவனங்கள் மற்றும் ஏழை விவசாயி என்ற சமன்பாடற்ற ஓா் ஒப்பந்த வணிகம் திணிக்கப்படுகிறது.

விவசாயிகளின் வாழ்வும், எதிா்காலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. விவசாயிக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஆதார விலைக்கும் கேடு ஏற்படுத்தப்படுகிறது.

விவசாயிகள், விளைபொருட்கள் வணிகம் மற்றும் வா்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தைத் திணித்து, மாநிலத்திற்குள்ளான வணிகம் மற்றும் வா்த்தகமும் பறிக்கப்படுகிறது.

மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தச் சட்டங்கள் விவசாயிகள் - விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் நுகா்வோா் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரானதும், வேளாண்மை முன்னேற்றத்துக்குப் பின்னடைவைத் தரக்கூடியதும், கூட்டாட்சித் தத்துவத்துக்குப் புறம்பானதுமாகும். இந்த மூன்று சட்டங்களுக்கும் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் அதற்கு துணைபோகும் ஆளும் அதிமுக அரசைக் கண்டித்தும் செப்டம்பா் 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களிலும், நகராட்சி மற்றும் ஒன்றியங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

விவசாயிகள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : மு.க.ஸ்டாலின்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT