தமிழ்நாடு

அவசரப்பட்டு நிறைவேற்றுவதால்தான் அச்சமாக இருக்கிறது: செல்லமுத்து

21st Sep 2020 06:08 PM

ADVERTISEMENT

 

விவசாய மசோதாவால் விவசாயிகளுக்கு நன்மையா, தீமையா என்பது உடனடியாக தெரியவில்லை அவை நடைமுறைக்கு வரும் போது தான் முழுமையாக தெரியும் என்று பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் கே.செல்லமுத்து தெரிவித்தார்.

உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் ஒட்டல் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சி மாநிலத் தலைவர் கே.செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியது. 

நாடாளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாவால் விவசாயிகளுக்கு நன்மையா, தீமையா என்பது உடனடியாக தெரியவில்லை. அவை நடைமுறைக்கு வரும் போது தான் முழுமையாக தெரியும். என்றாலும் இந்த மசோதாக்களை இவ்வளவு அவசரமாக நிறைவேற்றப்பட்டு இருப்பதால் தான் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் விவசாயிகள் தங்களது விளை பொருள்களை எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதே சமயம் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் மண்டிகள் சார்ந்த விற்பனை நடைபெற்று வருகிறது. விவசாய மசோதாக்களை வாபஸ் பெற வேண்டி வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்ய வேண்டும். கால்நடை தீவனம் மற்றும் கால்நடைகளின் விலை உயர்வால்  பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுபடியாகின்ற விலையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும். வேளாண்மை விளை பொருள்களை பாதுகாத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்திட ஏதுவாக குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும். ரூ.255 கோடி மதிப்பிலான வட்டமலைகரை கால்வாய் திட்டப்பணியை துரிதமாக நிறைவேற்றிட வேண்டும். 

அவிநாசி - அத்திகடவு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது போல் ஆணைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றி மழை காலத்தில் வீணாக கடலில் சேரும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசவுள்ளேன். கரோனா பொது முடக்க தளர்வால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கால்நடை சந்தைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 

ஈரோடு,திருப்பூர், கோவையில் மட்டும் கால்நடை சந்தை இயங்கவில்லை. மேலும் விவசாயிகள் நலன் கருதி திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள கால்நடை சந்தையை இடுவாய் அல்லது காரணம்பேட்டைக்கு இடமாற்றம் செய்திட வேண்டும். தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உடன் மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், மாநில மகளிரணி செயலாளர் கே.சி.எம்.பி.சங்கீதபிரியா, திருப்பூர் மாவட்ட செயலாளர் வாவிபாளையம் சோமசுந்தரம்,பொங்கலூர் ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணியம், காடாம்பாடி ஈஸ்வரன்,இளைஞரணி கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT