தமிழ்நாடு

பல்லடம் அருகே கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

20th Sep 2020 02:45 PM

ADVERTISEMENT

 

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள ரங்கபாளையத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொட்டிபாளையத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் மதன்குமார்(25). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பூரில் இருந்து காங்கேயத்திற்கு தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். 

திருப்பூர் - காங்கேயம் சாலையில் உள்ள நாச்சிபாளையத்தை அடுத்த ரங்கபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக எதிரே இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் ரங்கபாளையம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் லிங்கசாமி(47) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு பின்னால் காங்கேயத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்த திருப்பூர் முதலிபாளையம் செந்தில் நகர் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த மித்தரன்(17), அவரது சகோதரி மெர்சிகா(13) மற்றும் அவர்களது தாயார் ஜீவா(43) மூவரும் வந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் மித்தரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ADVERTISEMENT

விபத்தில் படுகாயமடைந்த ஜீவா,மெர்சிகா இருவரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். திருப்பூரில் முதலுதவி அளிக்கப்பட்டு கோவை மருத்துவமனைக்கு 108 ஆம்புலென்ஸ் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் இருவரும் உயிரிழந்தனர். இதன் மூலம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த  அவிநாசிபாளையம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து காரை அதிவேகமாக ஓட்டி வந்த மதன்குமார் என்பவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : car collided
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT