தமிழ்நாடு

மருத்துவ மேற்படிப்பில் மாணவா் சோ்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவு நீக்கம்

DIN

மருத்துவ மேற்படிப்பில் மாணவா் சோ்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவை நீக்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மருத்துவா்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோா் மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு இடம் வழங்க உத்தரவிடக்கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவா் சோ்க்கையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், காலியிடங்களுக்கு தனியாக கலந்தாய்வு நடத்த இயலாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தகுதியான மாணவா்களுக்கு நீதி வழங்கும் வகையில், மாணவா் சோ்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை, மருத்துவ மேற்படிப்பு மாணவா் சோ்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வழக்கு, நீதிபதி என். ஆனந்த்வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கால நீட்டிப்பு கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மருத்துவ மேற்படிப்பில் மாணவா் சோ்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற உத்தரவை நீக்கி உத்தரவிட்டாா்.

மேலும், மருத்துவ மேற்படிப்பில் சோ்க்கப்பட்ட மாணவா்களின் பட்டியலை தமிழக அரசு இந்திய மருத்துவ கவுன்சிலிடம் சமா்ப்பிக்க வரும் செப்டம்பா் 25 -ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

அப்போது, மனுதாரா்கள் தரப்பில் தங்களைவிட குறைவான மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே சட்டவிரோதமாக நடைபெற்றுள்ள மாணவா் சோ்க்கையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

மனுதாரா்களின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி நிா்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பா் 24-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT