தமிழ்நாடு

தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி

DIN

தமிழக அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பால் நடத்தப்பட்ட ‘கனெக்ட் 2020’ மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020யை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று (19.9.2020) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பால் செப்டம்பர் 15 முதல் 19-ஆம் தேதி வரை காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வரும் ‘கனெக்ட் 2020’ மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020, தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை 2020 மற்றும் தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை 2020 ஆகியவற்றை வெளியிட்டார்.

தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில் நுட்பம் சார்ந்த தொழில் துறைகளில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. அரசுத் துறைகள் மக்களுக்கான அரசின் சேவைகளை இணையவழியில் அளித்து வரும் நிலையில், அச்சேவைகள் மற்றும் அவை சார்ந்த தகவல் உட்கட்டமைப்புகளை இணையவழி ஊடுருவல் மற்றும் தாக்குதல்களிலிருந்து திறம்படப் பாதுகாத்திட, மாநிலத்திற்கான இணையப் பாதுகாப்பு கொள்கையை வரையறுப்பது இன்றியமையாததாகிறது. அதன்படி, தகவல் தொழில்நுட்பவியல் துறையினால் உருவாக்கப்பட்ட‚ தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020, முதல்வர் இன்று வெளியிட்டார். 

இக்கொள்கை, மாநிலத்தில் இணையப் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு மீறல்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும். தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த பல்வேறு இனங்களில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் புகுத்தி அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்கிடவும், மனித வளத்தை மேம்படுத்திடவும் தமிழ்நாடு அரசு உறுதி கொண்டுள்ளது. அதன்படி, அரசின் சமூக மற்றும் பொருளாதார நலத்திட்டங்களை இணையவழியில் நம்பகத்தன்மையுடன் கூடிய வெளிப்படையான முறையில் செயல்படுத்திட, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன்றான பிளாக்செயின்  எனப்படும் ‘நம்பிக்கை இணையத்’ தொழில்நுட்பத்தைப் தமிழ்நாடு அரசுத் துறைகள் பயன்படுத்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையினால் உருவாக்கப்பட்ட‚ தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை 2020 முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டார். 

இதன்மூலம், அரசின் மின்னாளுமைக்காக நம்பிக்கை இணையக் கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கிடும்.

அதுபோலவே, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் ஒன்றான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், பல்வேறு வகையிலான தரவுகளை அவற்றின் வகை, செயல்பாடு மற்றும் பரவல் போன்ற வகைகளில் கூராய்ந்து, அதன்மூலம் அவை தொடர்பான எதிர்காலத் தேவைகளை முன்கூட்டியே கணித்து, அதற்கான விரைவான தீர்வுகளையும் பரிந்துரை செய்யவல்லது. தற்சமயம், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகள் உலகளவில் மருத்துவ நோயறிதல், மருந்துப்பொருள் கண்டுபிடிப்புகள், சட்ட அமலாக்கம், இராணுவம், விண்வெளி, கல்வி, ஆளுமை, முதியோர் பராமரிப்பு போன்ற பல துறைகளில் மனித வாழ்க்கையோடு இணைந்து இயங்குகின்றது.

இத்தொழில்நுட்பத்தினை தமிழ்நாடு அரசுத் துறைகள் மக்களுக்கான இணையவழி சேவைகளை வழங்குவதில் பயன்படுத்திக் கொள்வதற்கான உத்திகளை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்பவியல் துறையினால் உருவாக்கப்பட்ட‚ தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை 2020-ஐ தமிழக முதல்வர் இன்று வெளியிட்டார். இதன்மூலம் வெளிப்படையான ஆளுமை மற்றும் வளர்ச்சி சார்ந்த இலக்குகளை தமிழ்நாடு எளிதாக எய்திட இயலும்.

அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் இன்று காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வரும் ‘கனெக்ட் 2020’ மாநாட்டில், இந்த ஆண்டிற்கான சிறந்த தொழில்முனைவோருக்கான விருதினை சென்னை - கான்ஸ்யூமெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எல்.என்.சாய் பிரசாந்துக்கும்; தனியார் துறையில் சிறந்த வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்கான விருதினை லார்சன் அண்டு ட்யூப்ரோ லிமிடெட் - ஸ்மார்ட் வேர்ல்ட் அண்டு கம்யூனிகேசன் பிசினஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் ஆர். சீனிவாசனுக்கும்; பொதுத் துறையில் சிறந்த வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்கான விருதினை பதிவுத்துறைத் தலைவர் ஜோதி நிர்மலாவுக்கும்; உலகளாவிய செல்வாக்கு பெற்ற நபருக்கான விருதினை ப்ரஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் கிரீஷ் மாத்ருபூதத்துக்கும் சமூகத் தொழில்முனைவோருக்கான விருதினை கோவை - பர்பிள் அயர்னிங் நிறுவனத்தின் இயக்குநர் அமானுல்லாவுக்கும்; ஊக்குவித்திடும் வகையிலான முன்மாதிரி நபருக்கான விருதினை இந்த்ரி ஆக்சஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் இராமநாதனுக்கும்; கோவிட் சாதனையாளருக்கான விருதினை ஹெலிக்சான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்விஜய் சங்கர் ராஜாவுக்கும்; சகிப்புத் தன்மைக்கான விருதினை கோவை - சி.ஜி.வேக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷூக்கும்; வழிகாட்டியாளர் விருதினை ப்யூச்சர் போக்கஸ் இன்போடெக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் எம்.வி. சுப்பிரமணியனுக்கும் வழங்கி கௌரவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT