தமிழ்நாடு

பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு புதிய கட்டடம்: முதல்வர் திறந்துவைத்தார்

19th Sep 2020 02:39 PM

ADVERTISEMENT

 

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (19.9.2020) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். 

மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், 9 கோடியே 70 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் கடந்த 19.6.2017 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடம் மிகவும் பழமை வாய்யததாகும். அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலுவலர்களும், பணியாளர்களும் அதிக அளவு இங்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது. இதற்காக, ஒரு லட்சம் சதுர அடியில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும். இயத கட்டடம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம்” என்ற பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்தார்ள்.

ADVERTISEMENT

அதன்படி, பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில், சுமார் 1,22,767 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் 39 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தை முதல்வர்  இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இப்புதிய கட்டடத்தின் தரைதளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், முதல் தளத்தில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கக அலுவலகம், இணை இயக்குநர் அறைகள், பொது கூட்டரங்கு, இரண்டாம் தளத்தில் பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலகம், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் அறைகள், மூன்றாம் தளத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறைகள், நான்காம் தளத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம், இணை உறுப்பினர் அறைகள், துணை இயக்குநர் அறை, உறுப்பினர்கள் அறைகள், ஐந்தாம் தளத்தில் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகங்கள், கூட்டரங்கு, ஆறாம் தளத்தில் கல்வி தொலைக்காட்சி அலுவலகம், கூட்டரங்கு மற்றும் அலுவலக அறைகள்  ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வரவேற்பு அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம், மின் தூக்கிகள், கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. 

மேலும், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டம் - கோமங்கலம்புதூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் - பெரியசெவலை, தேனி மாவட்டம் - பெரியகுளம், திருவண்ணாமலை மாவட்டம் - இரும்பேடு மற்றும் விழுப்புரம் மாவட்டம் - பனமலைப்பேட்டை ஆகிய இடங்களில் அமைந்துள்ள 5 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 கோடியே 70 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர்; என மொத்தம் 49 கோடியே 60 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் அமைச்சுப் பணிக்கு 635 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக இன்று 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலாளர்க. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT