சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தென்திருப்பதியாம் அரியக்குடி பத்மாவதி தாயார் உடனுறை திருவேங்கடம் உடையான் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று வெப்பமானி பரிசோதனை செய்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோவில் மிகவும் பிரசித்த பெற்றது. கரோனா தீநுண்மி தொற்று பரவாமல் இருப்பதற்கு பொது முடக்கத்தில் அரசு விதிமுறைகள் முறையாக இக்கோவிலில் கடைபிடிக்கப்படுகிறது.
வெப்பமானி பரிசோதனை செய்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு காட்சியளித்து அருள் பாலிப்பார். ஆண்டுதோறும் இதற்காக திரளான பக்தர்கள் இக்கோலிலுக்கு தரிசனத்திற்காக வருவது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா தொற்று காலமாக இருந்தாலும் பக்தர்கள் வருகை தந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு தீபாராதனைக்குப் பின் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவியுடன் சுவாமி எழுந்தருளினார்.
காலை 5.30 மணிக்கு பரிசோதனைக்குப் பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர் அழகம்மை ஆச்சி கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளிலிருந்து அரசு சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. காரைக்குடி டி.எஸ்.பி அருண் தலைமையில் காவலர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டிருந்தனர்.