சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சிறையில் உள்ள காவலர் முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் ஜாமீன் வழங்கக் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு மீது விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
"சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்து வந்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது. எங்களுக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நாங்கள் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவோம். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என காவலர் முருகன், தாமஸ் பிரான்சிஸ் , முத்து ராஜா ஆகியோர் இராண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் வாதிடுகையில், கைது செய்யப்பட்டு 80 நாள்களை கடந்து விட்டது. எனெவே ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சிபிஐ தரப்பில் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.