தமிழ்நாடு

இருமொழிக் கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டோம்: சட்டப்பேரவையில் முதல்வர் உறுதி

17th Sep 2020 04:52 AM

ADVERTISEMENT

சென்னை: இரு மொழிக் கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று தேசிய கல்விக் கொள்கை குறித்த விவாதத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை தேசிய கல்விக் கொள்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசின் கவனத்தை ஈர்த்து பேசியது: தேசிய கல்விக் கொள்கை-2020, மாநிலங்களின் கல்வி உரிமைக்கு எதிரானது. மும்மொழித் திட்டம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது, அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது.
மழலையர் பருவத்தில் முறை சார்ந்த கல்வி என்பது குழந்தைகளின் உரிமைகளுக்கு, மனித உரிமைகளுக்குப் புறம்பானது.

3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு, பிளஸ் 2 கல்விமுறையில் மாற்றம் எல்லாம், தமிழகத்தில்  வெற்றிகரமாகச் செயல்படும் கல்விமுறையைச் சீர்குலைப்பது ஆகும். குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமாக வரும் தொழிற்கல்வி, ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம் ஆகியன ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கின்றன.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கூறினார். ஆனால், சுகாதாரத் துறையின் சார்பில் சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் தாவரங்களின் பெயர்கள் எல்லாம் ஹிந்தியில் வரிசைப்படுத்திப் போடப்பட்டுள்ளன. இது மும்மொழித் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைந்திருக்கிறதா, இல்லையா?

ADVERTISEMENT

 எனவே, தேசிய புதியக் கல்விக் கொள்கை குறித்து உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி முதல்வர் விவாதிக்க வேண்டும். சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்: இருமொழிக் கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக இருக்கிறது. தாவரங்களின் பெயர் ஹிந்தியில் இடம்பெற்ற புத்தகம் மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டதாகும். தமிழகத்தில் உள்ள மூலிகைகளை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில், பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதற்காகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தப் புத்தகத்தை அரசின் கொள்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

அமைச்சர் செங்கோட்டையன்: மும்மொழிக் கொள்கைக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாடுகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜூன் 26-இல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தேசியக் கல்விக் கொள்கை குறித்து கல்வி நிபுணர்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டு, பிரதமருக்கு ஆகஸ்ட் 26-இல் அனுப்பப்பட்டது. அதில் மும்மொழி கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறோம். இருமொழிக் கொள்கையையே தொடர்ந்து பின்பற்றுவோம் என்று கூறியுள்ளோம். 

மேலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முறையை மாற்றியமைப்பதும் சரியாக இருக்காது என்று கூறியுள்ளோம். பாடத்திட்டத்தை மாற்றியமைக்கலாம் என்பதை மட்டும் ஏற்றுள்ளோம். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசுக்கு ஏற்ற தேர்வு முறை வேண்டும். தேசிய தேர்வு முறை கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 3 வயதுக்கு மேல் மட்டுமே கற்பித்தல் இருக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளோம்.

மேலும், புதிய கல்விக் கொள்கையில் உள்ளவை குறித்து விரிவாகப் பரிசீலிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித் துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்தக் குழுக்கள் அறிக்கைச் சமர்பித்ததும், அது தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுப்பார். 69 சதவீத இடஒதுக்கீட்டை ஜெயலலிதா எப்படிக் காப்பாற்றினாரோ, அதைப்போல புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம், சமதர்மம் ஆகியவற்றுக்கு பங்கம் ஏற்படுமானால், அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

சட்டப்பேரவைக் காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கக் கூடாது, புதிய கல்விக்கொள்கையை ஏற்கக் கூடாது என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:  எங்களுடைய கொள்கை இருமொழிக் கொள்கை. அதில் இருந்து பின்வாங்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. அண்ணா எதிர்த்தார். அதைத் தொடர்ந்து இருமொழிக் கொள்கைக்கு நேரு உறுதி கொடுத்தார். அதிமுகவும் சரி, அரசும் சரி இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம்.

கே.ஆர்.ராமசாமி: நீட் தேர்வில் தொடங்கி எல்லா விவகாரத்திலும் இப்படித்தான் செய்கிறீர்கள். எதிர்க்கிறீர்கள். தீர்மானம் போட மறுக்கிறீர்கள். பாஜகவை எதிர்க்க நீங்கள் தயாராக இல்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: பிரச்னையை திசைதிருப்புகிறீர்கள். நீட் தேர்வு 2010-இல் மத்திய காங்கிரஸ் ஆட்சிதானே கொண்டு வந்தது. நாட்டு மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழுக்கள் அமைத்துள்ளோம். அந்தக் குழுக்களின் அறிக்கையைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT