தமிழ்நாடு

விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேட்டில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது

17th Sep 2020 02:31 AM

ADVERTISEMENT

 


சென்னை: பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய ஒரு குற்றவாளிகூட தப்பிக்க முடியாது என்று வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடுகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசியதுடன், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதே கோரிக்கையை சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் 
வலியுறுத்தினார்.
அதற்கு அமைச்சர் துரைக்கண்ணு கூறியது: கரோனா காலத்தில் தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் வேளாண் இயக்குநரின் கணினி ரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். தகுதியில்லாத நபர்களை வலைதளத்தில் பதிவு செய்து பணம் பெற்றுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 
தகுதியில்லாத பயனாளிகளைச் சேர்க்க முக்கிய காரணமாக இருந்த 3 வேளாண் உதவி இயக்குநர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 8 வேளாண்மை துறை அலுவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 87 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 34  அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தகுதியில்லாத பயனாளிகள் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரு குற்றவாளிகூட தப்பிக்க முடியாது. விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் எந்த மாநிலத்திலும் முறைகேடு நடக்கவில்லை என்று உறுப்பினர் கூறினார். மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது. ஆனால், தமிழகத்தைப்போல குற்றவாளிகளை துரிதமாக கண்டுபிடிக்கும் நடவடிக்கை வேறு எங்கும் நடைபெறவில்லை என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT