தமிழ்நாடு

கல்விசார் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் அதிக பங்களிப்பினை செலுத்த வேண்டும்: பொ.குழந்தைவேல்

17th Sep 2020 03:26 PM

ADVERTISEMENT

 

ஆசிரியர்கள் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் அதிக பங்களிப்பினை செலுத்த வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்தார்.
 
தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாள் விழா, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, பெரியார் பல்கலைக்கழக முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு துணைவேந்தர் பொ.குழந்தைவேல், பதிவாளர் (பொ) கே.தங்கவேல் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து, பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கு துணைவேந்தர் பொ.குழந்தைவேல் இனிப்பு வழங்கினார். பெரியார் பிறந்தநாளையொட்டி, ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ஆட்சிப் பேரவைக் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பதிவாளர் (பொ) கே.தங்கவேல் வரவேற்றார்.

2019-2020-ம் ஆண்டிற்கான சிறந்த ஆராய்ச்சியாளர் விருதினை சேலம் ஏவிஎஸ் கல்லூரி மேலாண்மைத்துறைத் தலைவர் டி.சுதாமதி, ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி கணிதவியல் துறைத் தலைவர் வி.சதாசிவம், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் பி.சிவக்குமார் ஆகியோருக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினை நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் எம். ராஜசேகரபாண்டியன், ஊத்தங்கரை வித்யாமந்திர் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் என்.குணசேகரன் ஆகியோருக்கும் துணைவேந்தர் 
பொ.குழந்தைவேல் வழங்கினார். விருது பெற்ற அனைவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் கேட்பு வரைவோலையும் வழங்கப்பட்டது.
 
பின்னர் நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் பேசியது, 

ADVERTISEMENT

பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் கல்லூரிகளின் பங்களிப்பும் இருக்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்றுள்ள சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் அறிவுசார் நடவடிக்கைகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். 

தற்போதைய கரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் கல்லூரி ஆசிரியர்கள் 1200 பேருக்கு பணி மேம்பாட்டுத் திறன் பயிற்சி இணையம் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறைகள் வாயிலாக துறை வாரியாக இணையவழிக் கருத்தரங்குகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

ஆசிரியர்களுக்கான பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும்.  பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகம் மற்றும் நூலக வசதிகளை கல்லூரி ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தங்களின் கோரிக்கைகளுக்காக மட்டும் பல்கலைக்கழகத்தை அணுகாமல், கல்விசார் நடவடிக்கைகளிலும் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.பெரியார் 
பல்கலைக்கழகம் சார்பில் தேர்வுக்கான மதிப்பூதியம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து நிதிசார் நடவடிக்கைகளும் கணினி மயமாக்கப்பட்டு, நேரடியாக ஆசிரியர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது என்றார் அவர்.
 
இதனையடுத்து, பெரியாரின் சமூக பங்களிப்பு என்ற தலைப்பில் இதழியல் துறை உதவிப் பேராசிரியர் இரா.சுப்ரமணி சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அறிவியல் புல முதன்மையர் பேராசிரியர் சி.அன்பழகன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT