தமிழ்நாடு

புதுச்சேரியில் பொலிவுறு நகரம் திட்டம்

17th Sep 2020 02:46 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுச்சேரியில் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தை முதல்வர் வே.நாராயணசாமி புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
புதுச்சேரியில் பொலிவுறு நகரம் திட்டம் (ஸ்மார்ட் சிட்டி) தொடக்க விழா கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், சட்டப் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, அன்பழகன், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தத் திட்டத்தை தொடக்கிவைத்து முதல்வர் வே.நாராயணசாமி பேசியதாவது:
புதுவைக்கான பொலிவுறு நகரம் திட்டத்தில் எந்தெந்தத் திட்டங்களைச் செயல்படுத்தலாம் என குழு அமைத்து ஆய்வு செய்துள்ளோம். இதில், அடிப்படை வசதிகளைச் செய்தல், கால்வாய்களைச் சீரமைத்தல், வீடுகளைக் கட்டுவது, சுற்றுலா வசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.
தனியார் நிறுவனத்திடம் பொலிவுறு நகரம் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து திட்ட அறிக்கை கேட்டிருந்தோம். அவர்களால்தான் தாமதம். தற்போது அரசுத் துறைகள் மூலமாகவே இந்தத் திட்டத்துக்கான அறிக்கையைத் தயாரித்துள்ளோம். அன்பழகன் எம்.எல்.ஏ.வின் தொகுதியான திப்புராயப்பேட்டையில் அடுக்குமாடிக் குடியிருப்பு வருகிறது. துறைமுகத்துக்கும் சாலை வசதி செய்ய உள்ளோம். விழாவிலிருந்து அவர் வெளிநடப்பு செய்தது நியாயமற்றது.
அதிகாரிகள் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதைச் செய்தாலே தானாக நகரம் பொலிவுறும். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்கும் வகையில், பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.

விழாவிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.

இந்த விழாவில் கலந்துகொண்ட அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன், "விளம்பரத்துக்காக விழா நடக்கிறது. இது "ஸ்மார்ட் சிட்டி' திட்டமில்லை, "காங்கிரஸ் சிட்டி' திட்டம். எனது தொகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு, உப்பனாற்றில் மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட எந்தத் திட்டங்களையும் அரசு ஏற்கவில்லை. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. என்பதால், என்னைப் புறக்கணிப்பதாக நினைத்து மக்களைப் புறக்கணிக்கின்றனர். எனவே, விழாவிலிருந்து வெளியேறுகிறேன்' என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT