தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை: சட்ட மசோதா நிறைவேறியது

17th Sep 2020 02:40 AM

ADVERTISEMENT

 


சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகளை மேற்கொள்ள தனி அறக்கட்டளை அமைப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் புதன்கிழமை நிறைவேறியது. 

இந்த மசோதாவை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக மக்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்த சாதனைகள், தியாகங்களை நினைவுகூரும் வகையில் அவர் வசித்த இடமான வேதா நிலையம், நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் அறிவித்தார். வேதா நிலையத்தை மாநில அரசுக்கு தற்காலிகமாக உடைமை மாற்றம் செய்யவும், அங்குள்ள அசையா சொத்துகளை உரிமை மாற்றம் செய்திடவும், நினைவு இல்லத்தை உருவாக்கி நினைவிடமாக மாற்றவும் தனி அறக்கட்டளையை உருவாக்க அரசு திட்டமிட்டது. அதன்படி, "தமிழ்நாடு புரட்சித்தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்க கடந்த மே 21-ஆம் தேதியன்று அவசரச் சட்டம் ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டது.
இந்த சட்ட முன்வடிவானது, அவசரச் சட்டத்தை மாற்றியமைக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதன்பின், இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.
பொது அறக்கட்டளை: தமிழகத்தில் தொடங்கப்படும் பல்வேறு பொது அறக்கட்டளைகளுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: 
தமிழகத்தில் ஹிந்து, இஸ்லாமிய சமய அறக்கட்டளைகள் தவிர பிற அறம்சார் தன்மையுடைய அறக்கட்டளைகள் 1920-ஆம் ஆண்டைய அற மற்றும் சமய பொறுப்புக் கட்டளைகள் சட்டத்தால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு பொது அறக்கட்டளையும் பதிவு செய்வது, பொறுப்பாக இருப்போருக்கு தகுதியின்மை வரையறைகள் ஏற்படுத்துதல், அறக்கட்டளைகளால் கணக்குகளைப் பேணுதல் மற்றும் அதன் தணிக்கை ஆகியவற்றை மேற்கொள்ள சட்ட மசோதா வழிவகை செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT